மதுரை: ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் தாக்கல் செய்த மனுவில், “மதுரை ரயில் நிலைய வளாகத்தில் பாண்டிய நாட்டின் சின்னமாக இருந்த மீன் சிலை, மதுரை ரயில் நிலையம் நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்தது. ஒரே சிலையில் வைக்கப்பட்டிருந்த மூன்று மீன்களை அகற்றி விட்டனர். அதை மீண்டும் அதே இடத்தில் வைக்க உத்தரவிட வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
இந்த மனு கடந்த வருடம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மீன் சிலை அகற்றப்பட இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டு விட்டது என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ரயில்வே நிர்வாகம் நீதிமன்றத்தில் சொன்னதுபோல் நடக்கவில்லை என்றும், மீன் சிலைகள் அதே இடத்தில் இருப்பதாக தவறான தகவல் தெரிவித்ததாகக் கூறி, மனுதாரர் தரப்பில் மீண்டும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனாலும், ரயில்வே நிர்வாகம் குறிப்பிட்ட இடத்தில் மீன் சிலைகள் நிறுவப்படாததால் மனுதாரர் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், ரயில் நிலையம் அருகே மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் அச்சிலையை நிறுவ முடியுமா என்பது குறித்து முடிவெடுக்க வழக்கறிஞர் ஆணையம், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், மாநகராட்சி ஆணையாளர், மாவட்ட ஆட்சியர் கொண்ட தலைமையில் குழு அமைத்து உத்தரவு பிறப்பித்து இருந்தது.