மதுரை:மதுரை மருத்துவக் கல்லூரியை தேர்தல் பணிக்கு பயன்படுத்த தடை விதிக்கக் கோரிய வழக்கில், இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் தமிழ்நாடு அரசுத் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மருத்துவக்கல்லூரி மாணவர் சங்கம் சார்பாக ராஜா முகமது உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொது நல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை மருத்துவக்கல்லூரி மிகவும் பிரபலமான கல்லூரி. இங்கு சுமார், 4,000க்கும் அதிகமான மாணவர்கள் மருத்துவ படிப்பு பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறும்போது மதுரை மருத்துவக் கல்லூரி முழுவதுமாக காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படுவதோடு, 3 மாதங்களுக்கு முன்பாகவே மதுரை மருத்துவக் கல்லூரி தேர்தல் ஆணையத்தால் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
மேலும், தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படுவதோடு, பதிவான வாக்குகள் மருத்துவக் கல்லூரியில் எண்ணப்படுகின்றன. இதன் காரணமாக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பல்வேறு வகையான மருத்துவ ஆய்வகங்கள் மற்றும் வகுப்பறைகளுக்குச் செல்வதில் பெரும் சிக்கல்கள் ஏற்படுவதோடு, காவல்துறை மாணவர்களை அனுமதிக்க மறுக்கின்றனர்.