தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விதிமீறி வீடு கட்டிய விவகாரம்; பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா மீதான நடவடிக்கை என்ன? நீதிமன்றம் கேள்வி! - madurai bench

Prakash raj, bobby simha kodaikanal bungalow: கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி வீடு கட்டியதாக நடிகர்கள் பிரகாஷ்ராஜ் மற்றும் பாபி சிம்ஹா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா மீது நடவடிக்கை -
நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா மீது நடவடிக்கை -

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 4, 2024, 3:25 PM IST

மதுரை:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அனுமதி இன்றி கட்டடங்களை கட்டியதாக நடிகர்கள் பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஜுனைத் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில் பிரபல நடிகர்கள் பிரகாஷ்ராஜ் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் சொந்தமாக பங்களா கட்டி உள்ளனர். இந்த பங்களாவிற்கு கொடைக்கானல் நகராட்சியிடம் இருந்து உரிய அனுமதி பெறாமல், விதிமுறைகளைப் பின்பற்றாமல் கட்டங்களை எழுப்பி உள்ளனர்.

இதுபோன்று விதிமுறைகளை பின்பற்றாமல் கட்டடம் கட்டுவதால், கொடைக்கானலில் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அருகில் உள்ள வீடுகளும் இடிவதற்கு அதிக சாத்தியங்கள் உள்ளது. மேலும், கனரக இயந்திரங்கள் மூலமாக மலையில் உள்ள பாறைகளை அகற்றி உள்ளனர். இது விதிமுறைகளை பின்பற்றாமல் நடைபெற்று உள்ளது. எனவே, உரிய அனுமதி இல்லாமல், விதிமுறைகளைப் பின்பற்றாமல் மலைப்பகுதியில் கட்டடம் கட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “நடிகர் பாபி சிம்ஹா மற்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் ஆகியோர் மேற்கொண்ட இரண்டு கட்டடங்களின் கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்பட்டது. இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம்” என வாதிடப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதிபதி, இந்த வழக்கில் கட்டுமானப் பணிகளை நிறுத்திய நிலையில், இருவர் மீதும் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது? தற்போதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வருகிற 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:நேரில் ஆஜராகாத கெளதம சிகாமணி; ஜன.24-ம் தேதிக்கு மீண்டும் வழக்கு ஒத்திவைப்பு!

ABOUT THE AUTHOR

...view details