மதுரை:மதுரையைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15ஆம் தேதி அவனியாபுரத்திலும், 16ஆம் தேதி பாலமேட்டிலும், 17ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். அவனியாபுரம் கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகின்றன.
கடந்த ஆண்டுகளில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியினை தென்கால் பாசன விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் நடத்தி வந்தனர். இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியினை நடத்தியவர்கள், ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள் அதிகாரம் கொண்டவர்களாக இருப்பதாக குற்றம் சாட்டி, நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின்படி, மாவட்ட நிர்வாகம் குழுக்களை அழைத்து பேசியும் சமாதானமாகாத நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அதன் பின்னர், வருடந்தோறும் தை 15ஆம் தேதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியினை மதுரை மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து மாவட்ட நிர்வாகமே நடத்தி வருகிறது.
இந்த நிலையில், வரும் 2024ஆம் ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நாங்கள்தான் நடத்துவோம் என்று பல்வேறு தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டு வருகின்றனர். இதன் காரணமாக அவனியாபுரத்தில் இருக்கும் பல்வேறு பிரிவினர்களுக்குள் பிரச்சினை, அசம்பாவிதங்கள் மற்றும் வாக்குவாதங்கள் ஏற்படுகிறது. ஆகவே, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி மீது வெறுப்பு உண்டாகும் நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.
தனிக்குழுக்களோ, தனிப்பட்ட அமைப்புகளோ ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த நேரிட்டால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை மற்றும் சாதி ரீதியான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகையால், அவனியாபுரம் கிராமத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டை, மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுரை மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து நடத்த வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, ”எந்தவிதமான சாதி, மத சாயல்கள் இல்லாமல் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும். மேலும், இந்த ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுரை மாநகராட்சி இணைந்து நடத்த வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க:ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஜெயக்குமார் குடும்பத்தினருடன் வசிக்க தமிழக அரசு அனுமதி மறுப்பு! - உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தகவல்!