மதுரை:கரூர் மாவட்டம் சின்னாண்டன் கோயில் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “கடந்த 2021ஆம் ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர் பணி நியமனத்திற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் வெளியிடப்பட்டது. கிட்டத்தட்ட 3,237 காலியிடங்கள், ஊதியம் அறிவிப்பின்படி நான் உள்பட பல தேர்வர்கள் விண்ணப்பித்தனர். நான் கணித ஆசிரியருக்கு விண்ணப்பித்தேன்.
கடந்த 2022, பிப்ரவரி 16 அன்று ஆன்லைன் தேர்வு நடந்தது. நான் 150க்கு 103.6344 மதிப்பெண்கள் பெற்றேன். இதனையடுத்து அதே ஆண்டு ஆகஸ் 28 அன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தற்காலிகத் தேர்வுப் பட்டியலின்படி 1:2 விகிதத்தின்படி நாங்கள் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டோம். ஆனால், இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியலில் எனது பெயர் வரவில்லை.
ஆனால், TRB (Teachers Recruitment Board) முடிவு வெளியிட்ட அதே காலகட்டத்தில், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,060 பணியிடங்களுக்கான விரிவுரையாளர் பதவிகளுக்கு தேர்வு பெற்றவர்களுக்கான இறுதிப் பட்டியலும் வெளியானது. ஊதிய விகிதத்தை பொறுத்த அளவில், முதுகலை ஆசிரியருக்கு வழங்கப்படும் ஊதியத்தைக் காட்டிலும், பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு ஊதியம் அதிகம்.
எனவே, முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வையும், அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணியிடத்திற்கான தேர்வுகளை எழுதி முதுகலை ஆசிரியருக்கும், விரிவுரையாளர்களுக்கும் தேர்வு செய்யப்பட்டவர்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்குச் சென்று விட்டனர்.
முதுகலை ஆசிரியர் பணியிடத்தில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட பதவியில் சேரவில்லை என்றாலும், அடுத்த தகுதியான விண்ணப்பதாரர் வாய்ப்புகளைப் பெறலாம். ஆனால், TRB இந்த முறையைப் பின்பற்றாததால், ஒவ்வொரு அறிவிப்பிலும் கிட்டத்தட்ட 300 பேக்லாக் காலியிடங்கள் எழுகின்றன. இந்த அறிவிப்பிலும் கிட்டத்தட்ட 269 பின்னடைவு காலியிடங்கள் ஏற்பட்டு உள்ளது.
எனவே, காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு விதிமுறைப்படி வாய்ப்பு கொடுக்க வேண்டும். எனவே 3 ஆயிரத்து 237 காலியிடங்களுக்கு 2022, ஆகஸ்ட் 28 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்ட முதுகலை ஆசிரியர் பணியிடத்திற்கான இறுதிப் பட்டியலின் அடிப்படையில், தேர்வு செய்யப்பட்டும் பணியில் சேராதவர்களை கணக்கிட்டு, இந்த பட்டியலில் உள்ள காத்திருப்போர் பட்டியலில் உள்ளோருக்கு பணி வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி விக்டோரியா கவுரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “3 ஆயிரத்து 237 காலியிடங்களுக்கு ஆகஸ்ட் 28, 2022 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்ட முதுகலை ஆசிரியர் பணியிடத்திற்கான இறுதிப் பட்டியலின் அடிப்படையில் எத்தனை பேர் தேர்வு செய்யப்பட்டனர்?
எத்தனை பேர் பணியில் சேரவில்லை என்பது குறித்த விபரங்களை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தரப்பில் பதில் அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை வருகிற ஆகஸ்ட் 4ஆம் தேதி ஒத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தார்.
இதையும் படிங்க:ராமநாதபுரத்தில் உள்ள பழுதடைந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை அகற்ற நீதிமன்றம் உத்தரவு!