மதுரை:கன்னியாகுமரி பழவிளை கிராமத்தில் கட்டப்பட்டு வரும் கிறிஸ்தவ தேவாலயங்கள் கட்ட தடை விதிக்க கோரிய வழக்கில், தேவாலயம் கட்டுமானப் பணிக்கு இடைக்கால தடை விதித்தும், வழக்கு குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் தேவாலயம் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட வின்சென்ட் உள்ளிட்டோர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த பாபு என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், “கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம் தாலுகா, பழவிளை பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் இந்து மத வழிபாடு கோயில்கள் அருகே, வின்சென்ட் என்பவர் எந்த விதமான அனுமதியும் பெறாமல், தேவாலய பிராத்தனை கூடம் கட்டி வருகின்றார்.
இந்த கட்டிடத்திற்காக, மின்வாரிய உயர்மின் கோபுரம் அருகே குறைந்த தூரத்தில் கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதால், அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் தடுக்க மின்வாரிய செயற்பொறியாளர், கட்டுமானப் பணிக்கு தடை விதித்து நோட்டீஸ் அனுப்பி இருந்தார். ஆனால், வின்சென்ட் தொடர்ந்து சட்ட விரோதமாக கிறிஸ்துவ தேவாலய கட்டுமானப் பணியை மேற்கொண்டு வருகின்றார்.
கடந்த 1986ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் இரு தரப்பு மோதல் விவகாரம் தொடர்பாக, நீதிபதி வேணுகோபால் கமிட்டி அளித்த அறிக்கையின்படி, தேவாலயம், கோயில்கள் கட்ட அனுமதி பெற வேண்டும். உரிய அனுமதி பெறாமல் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளக் கூடாது.
அனுமதியின்றி வழிபாட்டுத் தலங்களில் ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது என கூறப்பட்டுள்ள நிலையில், வின்சென்ட் எந்த விதமான அனுமதியும் பெறாம,ல் சட்டவிரோதமாக சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் வகையில், தேவாலய பிரார்த்தனை கூடம் கட்டி வருவதற்கு தடை விதிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, நேற்று (ஜன.12) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம் தாலுகா பழவிளை பகுதியில் கிறிஸ்துவ தேவாலயம் கட்டுமானப் பணிக்கு இடைக்கால தடை விதித்தும், வழக்கு குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் தேவாலயம் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட வின்சென்ட் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டும் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க:ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை.. அமைச்சர் சிவசங்கர்