மதுரை: திருச்சி கொள்ளிடத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார். அதில், "திருச்சி, கல்லணை மற்றும் அதைச் சுற்றி உள்ள பூதலூர், லால்குடி உள்ளிட்டப் பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மணல் எடுப்பது தொடர்ந்தால் கல்லணை சேதமடைய வாய்ப்புள்ளது.
இதனால் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் முழுவதுமாக பாதிக்கப்படுவதுடன், அப்பகுதி மக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவர். ஆகவே, கல்லணையில் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் 15 கிலோமீட்டர் தொலைவில் மணல் எடுக்க இடைக்கால தடை விதிப்பதோடு, அப்பகுதிகளில் குவாரி நடவடிக்கைகளை மேற்கொள்ள முற்றிலுமாக தடை விதித்து உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், "அப்பகுதியில் 4 அரசு குவாரிகள் செயல்படுகிறது. இதற்கான உரிய அனுமதி பெற்று குவாரி இயங்கி வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், "அனுமதி பெற்று இயங்கினாலும், விதிகளை மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வழக்குத் தொடர்பாக அரசுத் தரப்பில் ஜனவரி 11ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை கல்லணையின் கிழக்கு, மேற்குப் பகுதிகளில் 15 கிலோ மீட்டருக்குள் இயங்கும் குவாரிகள் செயல்பட இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மேலும் இவ்வழக்கு ஜனவரி 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க:ஆவின்: முறைகேடாக பணியில் சேர்ந்த 47 பேர் நீக்கம்