மதுரை: விருதுநகர், மதுரை, திருச்சி ஆவினில் கடந்த அதிமுக ஆட்சியின் போது பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஒன்றரை ஆண்டுக்கு பிறகு மதுரை, விருதுநகர் ஆவின் பணியாளர்கள் நியமனத்தை அரசு ரத்து செய்தது. இதையடுத்து தங்களை மீண்டும் பணியில் சேர்க்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை தனி நீதிபதி விசாரித்து பணி நீக்க உத்தரவில் தலையிட மறுத்து மனுக்களை தள்ளுபடி செய்தார்.
இதை ரத்து செய்யக்கோரி ஆவின் பணியாளர்கள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரத சக்கரவர்த்தி அமர்வு பிறப்பித்த உத்தரவில், "மதுரை ஆவினில் 47 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆவின் பணிக்காக விண்ணப்பங்கள் பதிவு தபால் அல்லது விரைவு தபாலில் அனுப்ப வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் 33 பேரின் விண்ணப்பங்கள் பதிவு தபால் அல்லது விரைவு தபாலில் அனுப்பப்படவில்லை.
விண்ணப்பங்கள் பெறப்பட்டது. எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளது. விண்ணப்பங்கள் முறையாக, முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை.
எழுத்துத்தேர்வு முடிந்ததும் தேர்வு முடிவுகளை குப்பை தொட்டியில் வீசிவிட்டு, நியமனம் செய்ய வேண்டியவர்களிடம் நேரடியாக விண்ணப்பம் பெற்றுக் கொண்டு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மதுரை ஆவினில் தேர்வு முறைகேடு மட்டுமில்லாமல் குற்ற சதி, ஆவணங்களை திருத்தியது உட்பட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது.
இதனால் முறைகேடான நியமனங்களை ரத்து செய்து, அதற்கு காரணமான அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த அலுவலர்களை சுதந்திரமாக நடமாடவிட்டால், இதுபோன்ற முறைகேடுகளை அவர்கள் தொடர்ந்து செய்வார்கள். மதுரை ஆவின் பணியாளர் தேர்வு முறைகேடு தொடர்பாக, உத்தரவு நகல் கிடைத்த 48 மணி நேரத்தில் ஆவின் பொது மேலாளர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும்.