மதுரை: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த குமார், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கோடு, அண்ணாநகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பில் 5 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டு, இப்பகுதியில் அங்கன்வாடி கட்டடம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்டது.
ஆனால், அப்பகுதியில் உள்ள சிலர் இப்பகுதியில் விநாயகர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். ஏழை குழந்தைகள் படிப்பதற்காக அங்கன்வாடி கட்டடம் கட்டினால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு உதவியாக இருக்கும். ஆனால், முறையான அனுமதி இல்லாமல் இப்பகுதியில் விநாயகர் கோயில் கட்டடம் கட்டுவதற்காக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
விநாயகர் கோயில் கட்ட முயற்சி
இதுகுறித்து அலுவலர்களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, விநாயகர் கோயிலுக்காக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதியை மீட்டு அப்பகுதியில் அங்கன்வாடி கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.