மதுரை:பள்ளிக்கு அருகே கஞ்சா விற்றதாக தொடரப்பட்ட வழக்கில் பிணை வழங்க கோரி பல வழக்குகள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கின் முந்தைய விசாரணையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் எவ்வளவு கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு எங்கு வைக்கப்பட்டுள்ளது? எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது? போன்ற பல்வேறு கேள்விகளை நீதிபதி எழுப்பி இருந்தார்.
இந்த வழக்கு இன்று (செப்.16) நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், "பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா அனைத்தும் அந்தந்த காவல் நிலையத்தில் தனி அறைகளில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. உள்துறை செயலர், காவல்துறை தலைவர் பதில் மனு தாக்கல் செய்ய இருப்பதால் தனி அமைப்பு உருவாக்கி பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் உண்மைத் தன்மை சரி பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. அதில் 70 விழுக்காடு பணி முடிவடைந்துள்ளது. ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும்" என தெரிவிக்கப்பட்டது.