தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிராம சபை கூட்டத்தில் விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலாளருக்கு முன்ஜாமீன்!

Srivilliputtur: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தின்போது விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலாளருக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 7, 2023, 7:02 AM IST

மதுரை: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த தங்கப்பாண்டியன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் பிள்ளையார்குளம் ஊராட்சியில், ஊராட்சி செயலாளராக பணியாற்றி வருகிறேன். கடந்த அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தின்போது விவசாயி அம்மையப்பன் என்பவரை கை மற்றும் காலால் தாக்கியதற்காக வன்னியம்பட்டி விலக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கிராம சபை கூட்டத்தின்போது நடைபெற்ற சம்பவத்திற்கு மிகவும் வருந்துகிறேன். மேலும், நிபந்தனையற்ற மன்னிப்பு கோர தயாராக இருக்கிறேன். எனவே, இந்த வழக்கிலிருந்து தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளேன்” என குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் கிராமசபை கூட்டத்தில் நடந்த சம்பவத்திற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தங்கப்பாண்டியன் தெரிவித்துள்ளார். அப்போது அரசுத் தரப்பில், “கிராம சபைக்கூட்டத்தில் பொதுமக்கள் முன்னிலையில் விவசாயியை தாக்கியதற்கான ஆதாரங்கள் உள்ளன. பொது இடத்தில் அரசு அலுவலர்கள், அதிகாரிகள் முன்பு கேள்வி கேட்ட விவசாயி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது சட்ட ஒழுங்கு பிரச்னை. எனவே அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது” என வாதிடப்பட்டது.

மேலும் விவசாயி அம்மையப்பன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஊராட்சி செயலரான தங்கப்பாண்டியனுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, “தாக்கப்பட்டவருக்கு வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை. எனவே தங்கப்பாண்டியனுக்கு முன்ஜாமீன் அனுமதிக்கப்படுகிறது. வாரத்தில் ஒருநாள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்” என உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:முத்துராமலிங்கத் தேவர் தங்க கவசம் வழக்கு: அக்.10ஆம் தேதிக்குள் ஓபிஎஸ் தரப்பு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details