மதுரை:மதுரையில் உள்ளஅமெரிக்கன் கல்லூரியில் உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் பல்கலைக்கழக மானியக்குழு விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை எனவும், பல்கலைக்கழக பதிவாளர் 5 உதவி பேராசிரியர் நியமனத்தை அங்கீகரிக்க முடியாது என பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல்வர் மற்றும் செயலாளர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், “மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கிலம் மற்றும் பொருளியல் துறையில் காலியாக இருந்த உதவிப் போராசிரியர் பணியிடங்களை நிரப்ப கல்லூரி கல்வி இயக்குநரகம் அனுமதி வழங்கியது.
அதன் அடிப்படையில் ஆங்கிலம், பொறியியல் துறைக்கு தலா 2 உதவி பேராசிரியர்கள், வேதியியல் துறையில் ஒரு உதவி பேராசிரியர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களின் கல்வித்தகுதியை அங்கீகரிக்கக் கோரி மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளருக்கு மனு அனுப்பப்பட்டது.
ஆனால், உதவிப் பேராசிரியர்கள் தேர்வு நடைமுறையில் 2018ஆம் ஆண்டின் பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி, உதவி பேராசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டோரின் கல்வித் தகுதியை அங்கீகரிக்க மறுத்து பதிவாளர் உத்தரவிட்டார்.
அவரது உத்தரவை ரத்து செய்து, 5 உதவிப் பேராசிரியர்களின் நியமனத்தை அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எல். விக்டோரியாகவுரி பிறப்பித்த உத்தரவில், “உதவிப் பேராசிரியர்கள் தேர்வுக் குழுவில் துணை வேந்தரின் பிரதிநிதிகள் இருவர் இருக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு விதி 2018-இல் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த விதியை, பல்கலைக்கழக ஆளுகைக்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளும் 1.4.2020 முதல் பின்பற்ற வேண்டும் என தமிழக உயர் கல்வித்துறை அரசாணை பிறப்பித்துள்ளது. இது குறித்து மனுதாரர் கல்லூரி உள்பட அனைத்து கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகம் 10.4.2023-இல் தகவல் அனுப்பியுள்ளது.
ஆனால், அமெரிக்கன் கல்லூரியில் உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் பல்கலைக்கழக மானியக்குழு விதிகள் பின்பற்றப்படவில்லை. மானியக்குழு விதிக்கு எதிராக 5 உதவிப் போராசிரியர்கள் தேர்வு அமைந்துள்ளது. அதே நேரத்தில், பல்கலைக்கழகம் 5 பேர் நியமனங்கள் குறித்து எந்த கேள்வியும் எழுப்பவில்லை.
தேர்வு குழு தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு விதியைப் பின்பற்றுமாறு கூறி திரும்ப அனுப்பியுள்ளது.
இதனால் அமெரிக்கன் கல்லூரி நிர்வாகம் அனுப்பிய விண்ணப்பத்தை திரும்ப அனுப்பிய பல்கலைக்கழக பதிவாளர் 31.12.2020-இல் பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது, அதனால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:பாமாயில் கொள்முதல் டெண்டரை ரத்து செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி!