மதுரை:குளோபல் கேப்பிட்டல் டிரேடிங் என்ற பெயரில் 2010ஆம் ஆண்டு மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிதி நிறுவனம் நடத்தி 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்யப்பட்டது. இதில் முதலீடு செய்தவர்களில் நாட்ராயன் உள்பட பலர் மதுரை முதலீட்டாளர் பாதுகாப்பு நல நீதிமன்றத்தில் புகார் கொடுத்தனர்.
இந்த வழக்கில் நிதி நிறுவன அதிபர் சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டது. மேலும், இந்த சொத்துக்களை மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பில், இந்த சொத்துக்களை விற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்க உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து நிதி நிறுவனம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு தடை ஆணை பெற்று வழக்கு நிலுவையில் இருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் நீதிபதி புகழேந்தி முன்பு நேற்று (ஜூன் 9) விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து நீதிபதி புகழேந்தி, “நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்யப்பட்டதில் தமிழ்நாட்டில் பல லட்சம் கோடிகள் முடக்கப்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் கணக்கில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஏன் விரைந்து நடவடிக்கை இல்லை என்ற கேள்விக்கு, தமிழ்நாடு அரசு தரப்பில் மாவட்ட வருவாய் அலுவலர்தான் நிதி நிறுவன மோசடி முதலீடுகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பி கொடுப்பதில் அதிகாரியாக இருக்கிறார். அதே நேரத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி, மாவட்ட சட்ட ஒழுங்கு பிரச்னை, கனிமவள முறைகேடுகள் தடுப்பது மாவட்ட நிர்வாக பொறுப்பு மற்றும் பேரிடர் காலங்களில் கரோனா போன்ற தொற்று நோய்களுக்கு அவருடைய பங்கு முழுமையாக உள்ளதால் இந்த நிதி நிறுவன முதலீடுகளை பிரித்துக் கொடுப்பதில் காலதாமதம் ஏற்படுவதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.