மதுரை:போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட நபருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, அந்த அபராதத் தொகையை மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு சட்ட நூல்கள் வாங்குவதற்காக வங்கிக்கணக்கில் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்களை தமிழ்நாடு அரசு தடை செய்துள்ளது. இந்நிலையில், செங்கோட்டையைச் சேர்ந்த செண்பகராஜன் என்பவர், தடை செய்யப்பட்ட 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 307 கிலோ குட்கா புகையிலை பொருட்களை சட்ட விரோதமாக கடத்தி விற்பனை செய்துள்ளார்.
இதையும் படிங்க: இடைநிலை ஆசிரியர்களுக்கு நீதி வழங்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!
இந்த குற்றத்துக்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், செண்பகராஜன் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோவன், மனுதாரர் எதிர்காலத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடமால் இருக்க வேண்டும் எனவும், செய்த குற்றத்துக்காக 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுவதாகவும், இந்த அபராதத் தொகையை மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு சட்ட நூல்கள் வாங்குவதற்காக வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் எனக் கூறி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: “எந்த மாநிலத்துக்குச் சென்றாலும் அம்மாநில மொழியைக் கற்பது அவசியம்” - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்