மதுரை:திருநெல்வேலியைச் சேர்ந்த முத்துராமன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானில், டாடா நிறுவனம் சோலார் பேனல் உற்பத்தித் தொழிலை நிறுவுவதற்கு கட்டடங்களை கட்டி வருகின்றனர். சுற்றுச்சூழல் காக்க மதீப்பீட்டு அறிக்கையின்படி, சுற்றுச்சூழல் முன் அனுமதி (Piror E.C) பெற வேண்டிய திட்டமாகும். ஆனால், இவர்கள் முன் அனுமதி பெறவில்லை.
எனவே, இந்த திட்டத்திற்கு சுற்றுச்சூழல் முன் அனுமதி பெற்ற பிறகே தொழிற்சாலையில் உற்பத்தியைத் தொடங்க அனுமதிக்க வேண்டும். மேலும், கட்டட வரைபட அனுமதியும் பெறவில்லை. எனவே, டாடா நிறுவனத்தின் டாடா சோலார் பேனல் உற்பத்தி நிறுவனத்திற்கு தடை விதிக்க வேண்டும்” எனவும் அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவானது சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, டாடா நிறுவனத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், “இது டவுன் சிப் உருவாக்கவோ, வீடுகள் கட்டுவதற்கோ இல்லை. தொழிற்சாலைக்கான கட்டுமானம் நடக்கிறது. கட்டட வரைபட திட்ட அனுமதிக்கு விண்ணப்பித்துள்ளோம். இதற்கு சுற்றுச்சூழல் துறையின் அனுமதி தேவை இல்லை" என கூறினார்.