திருச்சி மலைக்கோட்டை தாயுமானசாமி திருக்கோயிலில் சமையல் பணியாளர் மற்றும் நெய்வேத்தியம் பணியிடங்களுக்கு பிராமணர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஜனவரி 12ஆம் தேதி இந்து அறநிலையத்துறை சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பை எதிர்த்து, அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் சார்பாக ரெங்கநாதன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில் கூறியுள்ளதாவது: "அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழ்நாடு அரசின் திட்டத்தில் பயிற்சி முடித்து, 14 ஆண்டுகளாக 203 பிராமணரல்லாத மாணவர்கள் அர்ச்சகர் பணி நியமனம் கிடைக்காமல் காத்திருக்கிறோம். எங்கள் பணி நியமனத்திற்காக போராடுவது மட்டுமில்லாமல் திருக்கோயில் பணி நியமனங்களில் பிராமணரல்லாதோருக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகவும் நாங்கள் போராடி வருகிறோம்.
இந்நிலையில் இந்து அறநிலையத்துறை சார்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பாணை சட்ட விதிகளுக்கு முரணாக உள்ளது. எனவே இந்த அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும்" என மனு தாக்கல் செய்திருந்தார்.