தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 28, 2023, 9:47 PM IST

ETV Bharat / state

தென்மாவட்ட வெள்ள பாதிப்பு; மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு!

Madras High Court Madurai Bench: தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

mdu-high-court-bench-case-seeking-central-government-to-provide-relief-funds-to-the-flood-affected-areas-of-tn-southern-districts
தென்மாவட்ட வெள்ள பாதிப்பிற்கு மத்திய அரசு நிதி வழங்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு..

மதுரை: மதுரையைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. சில பகுதிகளில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழையைக் காட்டிலும், அதிகமான மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்தது. இதனால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல ஏரி, குளங்களில் உடைப்பு ஏற்பட்டு தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பல கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன.

இதனால், ஏராளமான பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. பல இடங்களில் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழை, வெள்ள பாதிப்பால் தென்மாவட்டங்களில் ஏராளமானோர் வாழ்வாதாரங்களை இழந்ததோடு, உட்கட்டமைப்பு வசதிகளும் கடுமையாகச் சேதமடைந்துள்ளது.

2016ஆம் ஆண்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் இயற்கைப் பேரிடர்கள் பாதிப்புகளைக் கொண்டு மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில், மாவட்ட அளவில் கையாளப்படும் பேரிடர்கள், மாவட்ட மற்றும் மாநில அளவிலான குழுக்கள் கையாள வேண்டிய பேரிடர்கள் மற்றும் மாநிலக் குழுக்களோடு தேசியக் குழுக்கள் இணைந்து கையாள வேண்டிய பேரிடர் என மூன்று வகை உள்ளது.

2013ஆம் ஆண்டு உத்தரகாண்ட் வெள்ளம், 2014ஆம் ஆண்டு ஆந்திரா ஹுட் புயல், 2018ஆம் ஆண்டு கேரளா வெள்ளம் ஆகியவை கடுமையான இயற்கைப் பேரிடர்கள் என அறிவிக்கப்பட்டன. அந்த வரிசையில், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் தற்போது ஏற்பட்ட கனமழை வெள்ள பாதிப்பை கடுமையான இயற்கைப் பேரிடராக அறிவிக்க வேண்டும்.

2018ஆம் ஆண்டு கேரள மாநில வெள்ள பாதிப்பின்போது உடனடியாக 100 கோடி ரூபாயும், தேசியப் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து 500 கோடி ரூபாயும் கொடுக்கப்பட்டது. 15வது நிதிக்குழு பரிந்துரையின்படி, பேரிடர் காலங்களில் பாதிப்பு ஏற்படும் மாநிலங்களுக்கு தேசியப் பேரிடர் மேலாண்மை நிதி வழங்க வேண்டும்.

மேலும் மாநிலங்களுக்குப் பேரிடர் நிதியாகக் கொடுக்க தேசியப் பேரிடர் மேலாண்மை நிதிக்கு 1 லட்சத்து 60 ஆயிரத்து 153 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தெரிவித்த நிலையில், தற்போது தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு போதிய நிதி இல்லை என தெரிய வருகிறது.

2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழை வெள்ள பாதிப்புகளால் கிட்டத்தட்ட 1.9 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த பாதிப்பு கடுமையான இயற்கைப் பேரிடராக அறிவிக்க வேண்டும். மேலும், மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை வெள்ள பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு தமிழகத்திற்கு உடனடியாக 700 கோடியும், நிவாரண நிதியாக 2,000 கோடி ரூபாயும் ஒதுக்க வேண்டும் என தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் உள்ள நிதி விவரம், மாநிலங்களுக்கு ஒதுக்கும் நிதி, அதன் வழிமுறைகள் குறித்து மத்திய அரசு அரசிதழில் வெளியிட வேண்டும். தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களிலும் வரலாறு காணாத மழையால் ஏற்பட்ட பாதிப்புகளைத் தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்.

தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணைய நிதியிலிருந்து தமிழகத்திற்கு 2,000 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க மத்திய அரசின் உள்துறை, நிதித்துறை, காலநிலை மாற்றம், வனத்துறை, விவசாயத்துறை, தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்" என தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதி வேல்முருகன் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “நான்கு மாவட்டங்கள் கடுமையாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு உடனடியாக தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும், அதற்கான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், “அனைத்து இந்திய குடிமக்களை சமமாகப் பார்க்க வேண்டும். அனைவரும் சட்டமன்றத்திற்கு வாக்களிக்கிறார்கள், அதேபோல் நாடாளுமன்றத்திற்கும் வாக்களிக்கிறார்கள். மழையினால் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களிடம் உயிர் மட்டுமே மிஞ்சி உள்ளது. அனைத்தையும் மக்கள் இழந்து விட்டனர்.

எனவே, பாரபட்சம் பார்க்காமல் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென நீதிமன்றம் எதிர்பார்க்கிறது. எனவே, மனுதாரரின் கோரிக்கை குறித்து மத்திய அரசு தரப்பில் விரிவான பதில் மனுத் தாக்கல் செய்ய” உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஜனவரி முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க:தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாநில அளவில் முன்னுரிமை!

ABOUT THE AUTHOR

...view details