தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரூரில் ஐடி அதிகாரிகளை தாக்கிய வழக்கு; 4 பேரின் ஜாமீன் ரத்து!

IT Officers attack in Karur: கரூரில் ஐடி அதிகாரிகளை தாக்கிய வழக்கில் 4 பேரின் ஜாமீனை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்துள்ளது.

ஐடி அதிகாரிகளை தாக்கிய வழக்கில் ஜாமின் மனுவை ரத்து செய்து உத்தரவிட்ட மதுரைக்கிளை
ஐடி அதிகாரிகளை தாக்கிய வழக்கில் ஜாமின் மனுவை ரத்து செய்து உத்தரவிட்ட மதுரைக்கிளை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 2, 2024, 5:44 PM IST

மதுரை:கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மற்றும் உறவினர் வீடுகளில் கடந்த ஆண்டு மே 25ஆம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கி வாரண்ட் நகல், அரசு முத்திரைகள், வழக்கு தொடர்பான அரசு ஆவணங்கள், பென்டிரைவ் ஆகியவற்றை பறித்துச் சென்று, பென்டிரைவில் இருந்த தகவல்கள் முழுவதும் அழிக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஆவணங்களை பறித்துச் சென்றதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து, காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பலரை கைது செய்தனர். இதனையடுத்து 15 பேர் கரூர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றனர்.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி வருமான வரித்துறையின் உதவி இயக்குநர் யோக பிரியங்கா, கிருஷ்ணகாந்த், மற்றும் ஆய்வாளர்கள் ஸ்ரீனிவாசராவ் உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கி கைப்பற்றப்பட்ட ஆதாரங்களை அழித்ததையடுத்து ரீகன், ராஜா, சரவணன், ராமச்சந்திரன் உள்பட 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் இந்த நான்கு பேர் மட்டும் கரூர் நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கக் கோரி மனுத்தாக்கல் செய்த நிலையில், கரூர் மாவட்ட நீதிமன்றம் இவர்கள் நான்கு பேருக்கும் ஜாமீன் வழங்கியுள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும்" என கோரிக்கை விடுத்தனர்.

இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பாக இன்று (ஜன.2) விசாரணைக்கு வந்தது. அப்போது, வருமானவரித்துறை சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராகி, "வருமான வரித்துறையினர் சோதனை நடத்தச் சென்றபோது, இவர்கள் அனைவரும் சேர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இது எதையும் கருத்தில் கொள்ளாமல் கீழமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஜாமீன் வழங்கியுள்ளார். இது ஏற்கத்தக்கது அல்ல. இந்த ஜாமீன் மனுவை ரத்து செய்ய வேண்டும்" என வாதிட்டார். இதனை பதிவு செய்த நீதிபதி, தண்டபாணி ஜாமின் வழங்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.

இதையும் படிங்க:எண்ணூர் அமோனியம் கசிவிற்கு காரணம் என்ன? - தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் முக்கிய தகவல்!

ABOUT THE AUTHOR

...view details