தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடப்பதை ஏற்க முடியாது” - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை! - PMAY scheme scam

Madurai Bench: பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் முறையாக வெளிப்படைத்தன்மையோடு செயல்படுத்தப்பட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 6, 2023, 9:49 AM IST

மதுரை: சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலைச் சேர்ந்த லட்சுமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், “கடந்த 2018ஆம் ஆண்டு மத்திய அரசின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா வீடு கட்டும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து இருந்தார். அந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த அதிகாரிகள், திட்டத்தின் கீழ் என்னை பயனாளியாக தேர்ந்தெடுத்தனர்.

இந்த நிலையில் வீடு திட்டத்தின் கீழ் எனக்கு வரவேண்டிய பணம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது உரிய பதிலளிக்காமல், காலம் தாழ்த்தினர். மேலும், இது குறித்து விசாரித்தபோது, அதே கிராமத்தில் எனது பெயரைக் கொண்ட வேறொரு நபருக்கு இத்திட்டத்தின் கீழ் பயனாளியாக சேர்க்கப்பட்டது தெரிய வந்தது.

தன்னை பயனாளியாக தேர்ந்தெடுத்து விட்டு, வேறொரு நபரை முறைகேடாக அதிகாரிகள் திட்டத்தில் சேர்த்து பணத்தை முறைகேடு செய்துள்ளனர். எனவே, எனக்கு திட்டத்தின் கீழ் வர வேண்டிய பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்கவும், அதுமட்டுமில்லாமல் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “லட்சுமி என்பவர் 2018இல் விண்ணப்பிக்கிறார். பயனாளியாக தேர்வு செய்யப்பட்டும், பணப்பலன்கள் எதுவும் வரவில்லை. விசாரணையில் அவரது பெயரில் உள்ள வேறொரு பெண்ணுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. இதில் முறைகேடு நடந்துள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை” என வாதிட்டார்.

தொடர்ந்து அரசுத் தரப்பில், மனுதாரர் புதிதாக மீண்டும் விண்ணப்பித்தால் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி, “பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் வீடில்லாத ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டி கொடுப்பதற்காக கொண்டு வரப்பட்டது.

வறுமையில் உள்ளோருக்கான திட்டத்தில் முறைகேடு நடப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் முறையாக வெளிப்படைத்தன்மையோடு செயல்படுத்தப்பட வேண்டும். சரியான பயனாளிகளுக்கு திட்டம் சென்றடைவதை அதிகாரிகள்தான் முடிவு செய்ய வேண்டும். அப்போதுதான் உண்மையான பயனாளிகளுக்கு திட்டம் சென்றடையும்.

எனவே, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். தவறு செய்த அதிகாரிகள் மீது ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ,மனுதாரர் லட்சுமிக்கு 12 வாரத்தில் பிரமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மானியம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:சனாதன விவகாரம் குறித்த அமித் மாள்வியா மீதான வழக்கு; காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details