மதுரை:சென்னையைச் சேர்ந்த பீட்டர் ராயன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு கச்சத்தீவு ராமேஸ்வரத்தின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது. பின்னர் இந்தியா மற்றும் இலங்கை செய்து கொண்ட உடன்படிக்கையின்படி கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த உடன்படிக்கையில் பாரம்பரியமாக மீன் பிடிப்பு தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் எந்த இடையூறும் செய்யக்கூடாது என குறிப்பிடப்பட்டு உள்ளது. 1983 முதல் 2005 வரை 378 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டு உள்ளனர் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி (RTI- Right to information Act) தகவல் உள்ளது. மேலும், இதுவரை தமிழக மீனவர்கள் பல கோடி ரூபாய் மதிப்பு உள்ள படகுகளை இழந்துள்ளனர்.
அதன் பின்பு 2013ஆம் ஆண்டு 111 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டு உள்ளனர். கடந்த 19.06.2023-இல் 9 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மீண்டும் விடுவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து 21.06.2023ஆம் தேதி 22 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.