Cultural Revolution Madurai: 'அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்' என அந்தணர் குறித்து வள்ளுவர் சொல்லும் திருக்குறள் அறம் வழுவாது வாழ்கின்ற அனைவரையும் குறிக்கிறது என்ற கருத்தாக்கத்துடன் மதுரையிலுள்ள 'அறிவுச் சமூகம்' என்ற அமைப்பு, புதியதொரு பண்பாட்டுப் புரட்சியை மதுரையிலிருந்து முன்னெடுத்துள்ளது.
தத்தமது குடும்பத்தின் இல்லறக் கடமைகளைச் செவ்வனே ஆற்றி, தன்னைச் சுற்றியுள்ள எவருக்கும் துன்பம் தராது, உயர்வு தாழ்வு கற்பிக்காது அறம் பிறழாது வாழ்ந்து 60 வயதைக் கடந்த பெரியோரை ஆண், பெண் என்ற பாகுபாடின்றி, அவர்கள் ஒவ்வொருவருக்கும் அந்தணர் என்ற பட்டம் சூட்டும் விழாவை 'அந்தணர் பட்டம் சூட்டுதல் - திருநிலைப்படுத்தல் விழா' என்ற பெயரில் வருகின்ற ஜனவரி 9ஆம் நாள் பெருவிழாவாக அறிவுச் சமூகம் அமைப்பு கொண்டாடவிருக்கிறது.
அந்தணர் பட்டம்
இது குறித்து அறிவுச் சமூகம் அமைப்பின் தலைவர் தமிழ்முதல்வன் கூறுகையில், "அறிவுச் சமூகம் சாதி மத பேதமற்று இயங்கும் ஓர் அமைப்பாகும். திருக்குறள் மட்டுமன்றி, நமது பண்டைய இலக்கியங்கள் கூறுவதைப் போன்று அந்தணர் என்பது வாழ்வியல் நெறி சார்ந்தது.
பிறப்பின் அடிப்படையில் உருவானதல்ல. அதனை மெய்ப்பிக்கும்விதமாக, தங்களின் குடும்ப வாழ்க்கையில் பரிபூரணமாக வாழ்ந்த 65 வயதைக் கடந்த பெரியோர்களுக்கு 'அந்தணர்' என்ற பட்டம் சூட்டி மரியாதை செய்கிறோம்" என்றார்.
பண்பாட்டுப் புரட்சி
உயர் சாதியின் அடையாளமாகக் கருதப்பட்டுவரும் 'அந்தணர்' என்ற சொல்லை, பண்பு நிலை வாழ்வியல் சார்ந்து கட்டமைக்கப்பட வேண்டும் என்பதே 'அறிவுச் சமூகம்' அமைப்பின் நோக்கம் என்கின்றனர் அதன் நிர்வாகிகள்.
மேலும் வள்ளுவரின் வாக்கு, அயோத்திதாசப் பண்டிதரின் கூற்று ஆகியவற்றின் அடிப்படையிலேயே இதுபோன்ற பண்பாட்டுப் புரட்சியை நோக்கி நாங்கள் நகரத் தொடங்கியுள்ளோம் என்கிறார்கள்.