மதுரை அண்ணாநகர் நெல்லைவீதியில் வசித்து வருபவர் முடி திருத்தகத் தொழிலாளி மோகன்தாஸ். இவர் மேலமடை அருகே முடிதிருத்தகக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். கரோனா ஊரடங்கின்போது ஏழை எளிய மக்கள் படுகின்ற துன்பத்தைக் கண்டு, தனது மகளின் எதிர்காலத்திற்காகச் சேமித்து வைத்த ரூ.5 லட்சத்தை, அரிசி, காய்கறி, பருப்பு மற்றும் மளிகை சாமான்கள் வாங்கிக் கொடுக்க பயன்படுத்தியுள்ளார்.
அதற்கு முன்பாக தனது மகள் நேத்ராவிடம் அந்தப் பணத்தை ஏழை எளிய மக்களுக்காகச் செலவிட அனுமதி கோரியபோது, 9-ஆம் வகுப்பு பயிலும் நேத்ரா உடனடியாக ஒப்புதல் அளித்துள்ளார். முடி திருத்தகத் தொழிலாளியின் இந்த மனிதநேயத்தை இந்தியப் பிரதமர் மோடி கடந்த மே 31-ஆம் தேதி அனைத்திந்திய வானொலியில் மனதின் குரல் நிகழ்ச்சியில் பாராட்டிப் பேசியிருந்தார். இதனையடுத்து மதுரை மட்டுமன்றி, தமிழ்நாடெங்கிலும் பரபரப்பு பற்றிக் கொண்டது.
ஐநாவால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பின் நல்லெண்ண தூதரான முடிதிருத்தகத் தொழிலாளியின் மகள் நேத்ரா! - ஐநாவின் நல்லெண்ணத் தூதர்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் பாராட்டப்பட்ட முடி திருத்தகத் தொழிலாளி மோகன் மகள் நேத்ரா, ஐநாவால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பான மேம்பாடு மற்றும் அமைதிக்கான ஐக்கிய நாடுகளின் சங்கத்தின் ஏழை மக்களின் நல்லெண்ண தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தேசிய அளவிலான மனதின் குரல் நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமரே மோகனைப் பாராட்டியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அடுத்த ஆச்சரியமாக, ஐநாவால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பான மேம்பாடு மற்றும் அமைதிக்கான ஐக்கிய நாடுகளின் சங்கம், முடி திருத்தகத் தொழிலாளி மோகன்தாஸின் மகள் நேத்ராவை ஏழை மக்களின் நல்லெண்ண தூதராக அறிவித்து டிக்ஸான் ஸ்காலர்ஷிப்-ஆக (DIXON SCHOLARSHIP) ரூ.1 லட்சத்தை பரிசுத் தொகையாகவும் வழங்கி கௌரவித்துள்ளது.
அதுமட்டுமன்றி, ஐக்கிய நாடுகள் அவையின் மாநாடுகள் நடைபெறவுள்ள நியூயார்க் மற்றும் ஜெனீவாவில் குடிமை சார்ந்த அவைகளில் பேச வாய்ப்பு அளிக்கப்படவிருக்கிறது. இந்த வாய்ப்பின் மூலமாக அறிஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் உலகத் தலைவர்களோடு ஏழை மக்களின் பிரதிநிதியாகப் பேசுவதற்கு வாய்ப்பையும் பொறுப்பையும் வழங்கும் எனவும் மேம்பாடு மற்றும் அமைதிக்கான ஐக்கிய நாடுகள் சங்க குறிப்பு தெரிவிக்கிறது. நேத்ராவுக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பு என்பது தமிழ்நாடு மற்றும் இந்திய அடித்தட்டு மக்களின் குரலாய் எதிரொலிப்பதற்கான அரிய வாய்ப்பாகும்.