மதுரை:தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை எழுந்து சூரிய உதயத்திற்கு முன் புத்தாடை அணிந்து பொங்கலிட்ட பொது மக்கள் அதை சூரியபகவானுக்கு படைத்து வழிபட்டனர். தொடர்ந்து பொங்கல் பண்டிகையின் முக்கிய நிகழ்வாக கருதப்படுவது, ஜல்லிக்கட்டு.
மதுரை அவனியாபுரத்தில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விழா மிகக் கோலாகலமாக நடைபெற்றது. ஜல்லிக்கட்டில் 700-க்கும் மேற்பட்ட காளைகளும், 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். 11 சுற்றுகளாக நடைபெற்ற போட்டி சுவாரஸ்ய மிகுதி காரணமாக கடைசி 30 நிமிடங்கள் கூடுதலாக நீட்டிக்கப்பட்டு விமரிசையாக நடைபெற்றது.
கோலாகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த இளைஞர் விஜய், 28 காளைகளைப் பிடித்து முதல் இடம் பிடித்தார். 17 காளைகளை பிடித்து அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் 2-வது இடமும், விளாங்குடியைச் சேர்ந்த பாலாஜி 13 காளைகளை பிடித்து 3-வது இடமும் பெற்றனர்.
முதல் இடம் பிடித்த இளைஞர் விஜய்க்கு சிறந்த மாடுபிடி வீரருக்கான கோப்பை மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசு வழங்கப்பட்டது. ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் விஜய், தமிழக மின்வாரியத்தில் கேங் மேனாக பணியாற்றி வருகிறார்.
அதேபோல் சிறந்த காளைக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டு மற்றும் மூன்றாம் இடங்கள் பிடித்த வீரர்கள் மற்றும் காளைகளுக்கு, பசுவும் கன்றும் பரிசாக வழங்கப்பட்டன.