மதுரை:'தை' முதல் நாள் பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படும் நிலையில், பொங்கலுக்கே பெயர் போன மதுரை 'அவனியாபுரம் ஜல்லிக்கட்டு' மைதானம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தேர்வு செய்யப்பட்ட 1000 காளைகள், 600 மாடுபிடி வீரர்களுடன் கோலாகலமாக இன்று (ஜன்.15) தொடங்குகிது. மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் உறுதிமொழியுடன் காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் துவங்கும். வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, மேயர் இந்திராணி பொன் வசந்த் ஆகியோர் இதில் பங்கேற்கின்றனர்.
'தைப்பொங்கல்' திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் திருப்பரங்குன்றம் சாலையில் அமைந்துள்ள மந்தையம்மன் கோயில் முன்பாக அமைக்கப்பட்ட வாடிவாசலில் நடைபெறுகிறது. இன்று காலை 8 மணியளவில், மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்கின்றனர். அதன் பிறகு, அவனியாபுரத்திலுள்ள மந்தையம்மன் உள்ளிட்ட பல்வேறு கோயில்களின் காளைகள் அவிழ்த்து விடப்படும். பிறகு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் துவங்கும்.
8 சுற்றுகளாக நடக்கும் ஜல்லிக்கட்டு:இந்தப் போட்டி குறைந்தபட்சம் 8 சுற்றுகளாக மாலை 4 மணி வரை நடைபெறும் எனவும் ஒவ்வொரு சுற்றிலும் 50-லிருந்து 75 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பர். ஒவ்வொரு சுற்றிலும் அதிக காளைகளைப் பிடிக்கும் வீரர்கள் அடுத்த சுற்றில் விளையாட அனுமதிக்கப்படுவர். இதுவரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் விளையாட 1000 காளைகளும் 600 மாடுபிடி வீரர்களும் தேர்வாகியுள்ளனர்.
முதல் பரிசு 'கார்': இன்று அதிகாலை நடைபெறும் மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு, தேர்வாகும் நபர்கள் மற்றும் காளைகளே களமிறங்கி விளையாட அனுமதிக்கப்படுவர். முதல் பரிசு பெறும் மாட்டின் உரிமையாளருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிக காளைகளைப் பிடித்து முதலிடம் பெறும் மாடுபிடி வீரருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக கார் பரிசாக வழங்கப்பட உள்ளது.