மதுரை:உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தைப்பொங்கலை முன்னிட்டு மதுரை அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுகள் நேற்று முன்தினம் 15ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மிகவும் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 1,000 காளைகள், 600 வீரர்கள் பங்கேற்க டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.
நான்காவது சுற்று நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 110 காளைகள் அவிழ்க்கப்பட்டன. அந்தவகையில், 33 காளைகள் பிடிபட்டுள்ளன. இதில் சிவகங்கையை சேர்ந்த அபிசித்தர்(R-75) 8 காளைகளை அடக்கி முதலிடத்தில் உள்ளார். தலா 2 காளைகளை அடக்கி வலையங்குளம் பாலமுருகன்(R-73), இருங்கங்கோட்டை நல்லப்பா(R-80) 3ஆம் இடத்திலும் உள்ளனர். இதில், 2023-ல் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு பெற்ற கட்டிக்குளத்தை சேர்ந்த மாடுபிடி வீரர் சிவசேரன்(R-58) 4ஆம் இடத்தில் உள்ளார்.
இதற்கிடையே, முதல் சுற்றில் முதலாவதாக வந்த காளை முட்டியதில் ஒன்றாவது வரிசை எண் வீரர் தொண்டையில் காயம்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுகிறார். மற்றொரு மாடுபிடி வீரர் காளையைப் பிடித்து வென்ற நிலையில், நீண்ட தூரம் காளையை பிடித்த படியே சென்று திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவர் மருத்துவக்குழுவினரால் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதேபோல, ஒரு மாடுபிடி வீரருக்கு முகத்தில் காயமடைந்த நிலையில் அவர் மீட்புக் குழுவினரால் பாதுகாப்பாக முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டார்.
இந்த ஜல்லிக்கட்டு விழாவை காண்பதற்கு நடிகர் அருண் விஜய், இலங்கை அமைச்சர் தொண்டைமான் உள்ளிட்டோர் பார்வையாளராக கலந்துகொண்டுள்ளனர். இப்போட்டியில் நடிகர் சூரியின் காளை பங்கேற்கிறது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காயமடைந்தவர்கள் விபரம்:- (8.19 மணி நிலவரம்)
மாடுபிடி வீரர்கள்: 1 நபர்
மாட்டின் உரிமையாளர்கள்: 1 நபர்
பார்வையாளர்கள்: 1 நபர்
மேல்சிகிச்சை : 1 நபர்
முதல் சுற்று நிறைவில் நிலவரம்
மொத்தம்: 3 பேர்