தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், " மதுரை விமான நிலைய ஓடுதளத்தை 12 ஆயிரம் அடியாக விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஓடுதள விரிவாக்க பகுதி தேசிய நெடுஞ்சாலையிடம் உள்ளதால், வாரணாசியைப் போல ஓடுதள மேம்பாலம் அமைப்பது குறித்து ஆய்வுகள் நடந்தது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
அதே போல, பிரத்யேக குளிர்சாதன சேமிப்பு கிடங்கு வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
எனவே, மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்க பணிகளை விரைந்து மேற்கொள்ளவும், குளிர்சாதன சேமிப்பு கிடங்கு வசதி செய்திடவும், சர்வதேச விமான நிலையமாக மாற்றத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, விமான போக்குவரத்து துறை செயலர் தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், " வசதிகள் மற்றும் தேவையின் அடிப்படையில் சர்வதேச விமான நிலையமாக அறிவிப்பது குறித்து ஒன்றிய அரசின் அமைச்சரவை தான் முடிவு செய்யும். தற்போது இதுதொடர்பாக ஒப்புதல் பெறுவது குறித்து எந்த திட்டமும் இல்லை.
விமான ஓடுதளத்தை விரிவாக்கம் செய்வதற்கான மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டுள்ளது. 2286 மீ ஓடுதளம் 3810 மீ ஓடுதளமாக மாற்றப் படவுள்ளது. இதற்கு 615.92 ஏக்கர் நிலம், கூடுதலாக தேவைப்படுகிறது. இது குறித்து தமிழ்நாடு அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நில ஆர்ஜித பணிகளுக்கு தமிழ்நாடு அரசும் ஒப்புதல் தந்துள்ளது. ஆனால், சாலைக்கு மேல் பகுதியில் விமான ஓடுதளம் அமைக்கும் திட்டத்திற்கு நிலம் ஆர்ஜிதம் செய்ய சில நில உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திட்டத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறோம் எனதெரிவித்திருந்தனர்.
இதையடுத்து நீதிபதிகள், நில ஆர்ஜிதம் தொடர்பான பணிகளை தமிழ்நாடு அரசு விரைவாக செய்து கொடுக்க வேண்டும் என்றும், ஓடுதளம் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்க ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தனர்.