மதுரை: காரைக்குடி மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கட்சி மற்றும் தனியார் நிகழ்வில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா டெல்லியில் இருந்து தனி விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து விமான நிலையம் அருகே உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பாஜக பல்துறை வல்லுநர்கள் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், மாநில பொறுப்பாளர் சிடி ரவி, தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கு பெற்றனர்.
இதில் கலந்து கொண்ட பேசிய ஜே.பி.நட்டா, "தமிழ் நிலம் கலாச்சாரத்தின் நிலம். தேச விடுதலையில் தமிழ் மக்களின் பங்கு அளப்பறியது. கடந்த எட்டு ஆண்டுகளாக மோடி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது.
தமிழ்நாடும் பல்வேறு துறைகளிலும் வளர்ந்து வருகிறது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை நாட்டில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. ஜி.எஸ்.டி அமல்படுத்துவதற்கு பல தடைகள் இருந்து, அது அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. இதனால் மக்களின் நேரம், உழைப்பு அனைத்தும் சேமிக்கப்பட்டு உள்ளன.
இந்தியாவை ஜி.எஸ்.டிக்கு முன், பின் என இரண்டாக பார்க்கலாம். நாடு முழுவதும் வரி வசூல் அதிகரித்துள்ளது. 35% ஆக இருந்த குறு சிறு நிறுவனங்களின் வரி வசூலும், 38% ஆக அதிகரித்துள்ளது. மேக் இன் இந்தியா திட்டம் மூலம் 85% மக்கள் வளர்ச்சியடைந்துள்ளனர்.
கரோனவுக்கு பின்னர் அனைத்து துறைகளிலும் இந்தியா வளர்ச்சி கண்டுள்ளது. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் நிலை 10% ஆக குறைந்துள்ளது. மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற 550 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
அதற்காக 633.17 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு கேட்ட நிலையில், தமிழ்நாடு அரசு 543 ஏக்கர் நிலத்தை மட்டுமே கொடுத்துள்ளது. இருந்தும் சர்வதேச விமான நிலையத்திற்கான பணிகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் 95% நிறைவடைந்து உள்ளன.