மதுரை:தமிழ்நாட்டில் கடந்த 50 வருடமாகவே திமுக, அதிமுக என்ற 2 முக்கிய கட்சிகள் மட்டுமே மாறிமாறி ஆட்சியை கைப்பற்றி வருகிறது. இந்தநிலையில் 10 ஆண்டுகளாகத் தொடர்ந்த அதிமுக ஆட்சி ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் உடைந்தது. அதனையடுத்து தற்போது தமிழ்நாட்டில் திமுக ஆட்சி செய்து வருகிறது.
இந்த நிலையில், வரும் தேர்தலை முன்னிட்டு தற்போது அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் மாபெரும் மாநாட்டை நடத்த வேண்டும் என முடிவு செய்தார். இதற்கு முன்பும் அதிமுக எழுச்சி மாநாடு நடந்துள்ளது. ஆனால் இதில் என்ன வித்தியாசம் என்றால், இதுவரை ஆளுங்கட்சியாக இருந்த போது மட்டுமே நடந்துள்ளது.
தற்போது தான் முதல் முறையாக எதிர்க்கட்சியாக இருக்கும் நிலையில், அதிமுக எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இது வெற்றி காணுமா என பல நாட்களாகவே அரசியல் வட்டாரத்தில் பல சர்ச்சைகளை கிளப்பி வந்தது. அதைத் தொடர்ந்து இன்று (ஆக.20) மதுரையில் அதிமுகவின் எழுச்சி மாநாடு தடபுடல் ஏற்பாடுகளுடன், கோலாகலமாக துவங்கப்பட்டுள்ளது எனலாம்.
வலையங்குளம் அருகே அதிமுகவின் 'வீர வரலாற்றின் பொன்விழா மாநாடு' இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும், அக்கட்சியின் நிர்வாகிகளும் வருகை தந்துள்ளனர். தற்போது மாநாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்ட 51 அடி உயர அதிமுக கொடி மரத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று காலை 8.30 மணியளவில் கொடியேற்றினார்.