தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"நீட்டுக்கு அப்போ ஆதரவு.. இப்போ உண்ணாவிரதம்.. திமுக போடும் நாடகம்.." எடப்பாடி பழனிசாமி! - Madurai admk conference

நீட் தேர்வுக்கு எதிராக திமுக உண்ணாவிரதம் இருப்பதெல்லாம் மக்களை ஏமாற்றும் நாடகம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து உள்ளார்.

Edappadi palanisamy
எடப்பாடி பழனிசாமி

By

Published : Aug 21, 2023, 7:13 AM IST

Updated : Aug 21, 2023, 7:59 AM IST

EPS Speech

மதுரை :அதிமுக சார்பாக பொன்விழா மாநாடு மதுரை மாவட்டம் வலையங்குளம் அருகே நேற்று (ஆகஸ்ட். 20) நடைபெற்றது. மாநாட்டு அரங்கில் அமைக்கப்பட்டு இருந்த 51 அடி உயர அதிமுக கொடியை காலை 8.50 மணியளவில் எடப்பாடி பழனிசாமி ஏற்றினார். பிறகு பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம், கவியரங்கம், இன்னிசைக் கச்சேரி மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மாலை 4.00 மணியளவில் மாநாட்டு மேடையில் பொதுக்கூட்டம் தொடங்கியது. "மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கோடு செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு, திருக்குறளை தேசிய நூலாக மத்திய அரசு அங்கீகரித்தல், தமிழை அரசியல் அமைப்புச் சட்டம் மூலம் ஆட்சிமொழியாக்குதல், புதுச்சேரியை மாநிலமாக அங்கீகரித்தல், மகளிர் உரிமைத்தொகைக்கு கட்டுப்பாடுகள் விதித்ததைக் கண்டித்தல், கச்சத்தீவை மீட்க மத்திய அரசுக்கு அழுத்தம் தராத தமிழக அரசைக் கண்டித்தல், உள்ளாட்சி அமைப்புகளின் நிதியை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தும் தமிழக அரசைக் கண்டித்தல், மக்கள் விரோத ஊழல் ஆட்சி நடத்தும் ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தல் உள்ளிட்ட 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன".

பின்னர் மாநாட்டில் சிறப்புரையாற்றிய எடப்பாடி பழனிசாமி; அதிமுக ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்களைக் குறிப்பிட்டு விளக்கிப் பேசினார். நீட் விவகாரத்தில், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது பொய்யான வாக்குறுதிகளைத் திமுக தந்ததாகக் குற்றம்சாட்டிய அவர், கடந்த 2011 ஆம் ஆண்டு மத்தியில் ஆண்ட காங்கிரஸ் கட்சியின் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த குலாம் நபி ஆசாத், நீட் தேர்வை கொண்டு வர முயன்றதாக தெரிவித்தார்.

அப்போது சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்த திமுகவின் காந்தி செல்வன் அதை ஆதரித்தது ஏன்? எனவும், உதயநிதி ஸ்டாலின் உண்ணாவிரதம் இருப்பது மக்களை ஏமாற்றும் செயல் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை உச்சநீதிமன்றம் வரையும் கூட கொண்டு சென்று வழக்கை அதிமுக நடத்தும் என்று தெரிவித்தார்.

அதிமுகவை பொறுத்தவரை தலைமைக்கு விசுவாசமாக இருக்கின்ற அடிமட்டத் தொண்டர்களும் கூட உயர் பொறுப்புக்கு வர முடியும் என்பதற்கு நானே எடுத்துக்காட்டு என எடப்பாடி பழனிசாமி கூறினார். அதிமுக என்ற கட்சி வளர்வதற்கு தொண்டர்களே மிகப் பெரும் அடித்தளமாக இருக்கிறார்கள் என்றார்.

இந்த மாநாட்டிற்கு தமிழகம் முழுவதிலிருந்தும் 15 லட்சம் பேர் வருகை தந்து சாதனை படைத்ததாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். முன்னதாக சர்வ சமயப் பெரியவர்களால் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 'புரட்சித் தமிழர்' என்ற பட்டம் வழங்கப்பட்டது. இந்த மாநாட்டில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, ராஜலட்சுமி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, தமிழ்மகன் உசேன் உள்ளிட்ட பலர் பேசினர்.

மதுரை-அருப்புக்கோட்டை சாலையில் நடைபெற்ற இந்த மாநாடு, தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனால் மதுரையைக் கடந்து தென்மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டிய பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:'இந்தியா' கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் நீட் இருக்காது: அமைச்சர் கே.என்.நேரு!

Last Updated : Aug 21, 2023, 7:59 AM IST

ABOUT THE AUTHOR

...view details