மதுரை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடத்தில் நூற்றாண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமாக நடைபெறும் பட்டினப்பிரவேச விழாவை இந்த ஆண்டு அரசு தடை செய்துள்ளது. இது தொடர்பாக மதுரை ஆதீனம் 293ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "நான் தருமபுர ஆதீனத்தில் தான் படித்தேன். தருமபுர ஆதீனத்தில் தேவாரப் பாடசாலை, சைவநெறி பாடசாலை அமைக்கப்பட்டு அறம் வளர்க்கப்பட்டது. தமிழ்மொழி வளர்ப்பையும், சைவத்தையும், தமிழையும் பாதுகாக்கும் ஆதீனம் தருமபுர ஆதீனம். பட்டினப்பிரவேச நிகழ்ச்சி 500 ஆண்டுகளாக நடக்கும் பாரம்பரியம்.
ஆளுநர் விவகாரம் தான் பட்டினப்பிரவேச நிகழ்ச்சி ரத்துக்குக் காரணம். பட்டினப்பிரவேச நிகழ்ச்சி காங்கிரஸ் ஆட்சியின் போது நடந்தது. இந்திய குடியரசுத் தலைவரே விரும்பிய ஆதீனம், வெள்ளைக்காரர்கள் ஆட்சி மற்றும் கருணாநிதி, ஜெயலலிதா காலத்தில் கூட இது நடந்தது. இதற்கு ஏன் தடை விதிக்க வேண்டும்? தற்போது தடை விதிக்கப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது.
முதலமைச்சர் ரகசிய காப்பு பிரமாணம் எடுக்கிறார். அதை எடுக்கக்கூடாது என ஏன் சொல்லக்கூடாதோ அது போலத்தான் இந்நிகழ்ச்சி. பாரம்பரிய நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கக்கூடாது. திருநாவுக்கரசர் பல்லக்கை திருஞானசம்பந்தர் சுமந்துள்ளார். உயிரைக்கொடுத்தாவது எனது குருவான தருமபுர ஆதீன பட்டினப் பிரவேசத்தை நடத்துவோம். பட்டினப் பிரவேச நிகழ்வை நடத்த அரசு அனுமதி கொடுக்க வேண்டும்.