தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Special: மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக கழிப்பறை - மதுரையைச் சேர்ந்த அப்துல் ரஸாக் அசத்தல்!

மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் புதிய மற்றும் நவீன கழிப்பறை ஒன்றை மிகக் குறைந்த செலவில் உருவாக்கி அசத்தியுள்ளார் மதுரையைச் சேர்ந்த அப்துல் ரஸாக். அதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பு.

toilet for differently abled persons
toilet for differently abled persons

By

Published : Sep 30, 2021, 1:47 PM IST

Updated : Oct 1, 2021, 12:53 PM IST

மதுரை : இயல்பான மனிதர்களின் பொதுப்புத்தி சார்ந்தே இங்கு அனைத்துத் திட்டங்களும் வகுக்கப்படுகின்றன எனும்போது, மாற்றுத்திறனாளிகள் படுகின்ற இன்னல்கள் குறித்த சிந்தனைப்போக்கும் அவர்களுக்கான திட்டங்களும் நமது சமூகத்தில் தற்போதும் போதாமையாகவே உள்ளன என்பதற்கு நமது நாட்டிலுள்ள கழிவறை வசதிகளே எடுத்துக்காட்டாய்த் திகழ்கின்றன.
ஒவ்வொரு பொதுக்கழிப்பறைகளிலும் மாற்றுத்திறனாளிகள் குறிப்பாக தவழும் மாற்றுத்திறனாளிகள் படுகின்ற வேதனை எழுத்தில் வடிக்க இயலாத கொடுமைகளைக் கொண்டதாகும். ஆனாலும் நமது ஒன்றிய அரசு 'அனைவருக்கும் கழிவறை' திட்டத்தைக் கொண்டு வந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையிலும், மாற்றுத்திறனாளிகளுக்கான பொதுக்கழிப்பறை குறித்து எப்போது சிந்திக்கப்போகிறது என்பது தெரியவில்லை.

அப்துல் ரஸாக்
இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த அப்துல் ரசாக், தனது சொந்த நகையை அடகு வைத்து மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் மிக நேர்த்தியான கழிவறை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார். தேவைப்படும் வகையில் ஏற்றி இறக்கும் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்தக் கழிவறை அவர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்கிறார்.

மதுரை மாநகர் பீபீகுளம் அருகே வசித்து வரும் அப்துல் ரஸாக், இதுவரை 45க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியதற்காக முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் மற்றும் பிரதீபா பாட்டில் ஆகியோரிடம் நற்சான்றிதழ்களைப் பெற்றுள்ளார். இது குறித்து மாற்றுத்திறனாளி முகமது சாதிக் கூறுகையில், 'என்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகளின் துயரம் கண்டு அப்துல் ரஸாக் இந்தக் கழிவறையை உருவாக்கியுள்ளார்.

மாற்றுத்திறனாளி கழிப்பறை

பொதுக் கழிவறைகளில் எங்களுக்கான கழிப்பறைகளே இல்லாத நிலையில், நாங்கள் ஒவ்வொருமுறையும் மிகுந்த வேதனையுடன்தான் அதனுள்ளே நுழைவோம். அந்த நிலை மாறுவதற்கு இந்தக் கழிவறை உந்துதலாக அமையும் என நம்புகிறேன்' என்கிறார். வெறும் 4 ஆயிரம் ரூபாய் செலவில் அப்துல் ரஸாக் வடிவமைத்துள்ள இந்தக் கழிப்பறை, மாற்றுத்திறனாளிகளின் வசதிக்கேற்றவாறு ஏற்றி இறக்கும் தொழில்நுட்பத்தில் உள்ளது.

இதனை மின்னணுத் தொழில்நுட்பத்திலும் உருவாக்க முடியும் என்பதுடன், அதற்கு ஒன்றிய மாநில அரசுகள் அல்லது தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன்தான் மேற்கொள்ள முடியும் என்கிறார். முகமது சாதிக்கின் நண்பர் பாஸ்கர் கூறுகையில், 'கழிவறைக்குச் செல்லும் பல சமயங்களில் முகமது துன்பப்படுவதை நானே நேரில் கண்டுள்ளேன்.

பேட்டி

இவர்களுக்கெல்லாம் விடிவே கிடையாதா என பலமுறை நானே நினைத்துள்ளேன். தற்போது நண்பர் அப்துல் ரஸாக் கண்டுபிடிப்பின் வாயிலாக அந்த வேதனை தீர்ந்துள்ளது. இந்த முயற்சிக்கு மத்திய, மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டும்' என்கிறார். இதற்கிடையில், நாட்டில் 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான பொதுக்கழிப்பறைகள் ஒன்றுகூட இல்லை என்பது மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கின்ற வழக்கறிஞர் அகில் உஸ்மானி கடந்த 2019ஆம் ஆண்டு ஆர்டிஐ மூலம் ஒன்றிய அரசிடம் எழுப்பிய கேள்வியொன்றில் பதில் கிடைத்துள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக கழிப்பறை - மதுரையைச் சேர்ந்த அப்துல் ரஸாக் அசத்தல்!
இதுகுறித்து அப்துல் ரஸாக் கூறுகையில், 'எனது வீட்டிற்கு அருகிலுள்ள மாற்றுத்திறனாளி முகமது, மற்ற எல்லோருக்கும் தேவையான கண்டுபிடிப்புகளைச் செய்து தருகிறீர்கள். ஆனால் எங்களைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கென்று கழிப்பறை ஒன்றை உருவாக்கித் தரலாமே என பலமுறை என்னிடம் கேட்டிருந்தார்.

கழிவறை உருவானது எப்படி?

அதற்காக அவர்களிடம் நான் பேசியபோதுதான் அவர்கள் படும் துயரங்களை அறிய முடிந்தது. ஆகையால் உடனடியாக செய்தே ஆக வேண்டும் என்ற முடிவெடுத்து, என் வீட்டிலிருந்த மோதிரம் ஒன்றை அடகு வைத்து தேவையான பொருள்களை வாங்கி உருவாக்கத் தொடங்கினேன். இதற்காக முதலில் நானே டிராயிங் செய்தேன்.

ஏனென்றால், தேவையின்றி செலவாகி விடக்கூடாதல்லவா..? இரவும் பகலும் திட்டமிட்டு உருவாக்கினேன். இதற்காக பல்வேறு மாற்றுத்திறனாளிகளையும் வரவழைத்து அவர்களிடமும் ஆலோசனை பெற்று இறுதி செய்தேன்' என்கிறார். மேலும் அப்துல் ரஸாக் கூறுகையில், 'நான் உருவாக்கிய இந்தக் கழிப்பறை மாற்றுத்திறனாளிகளுக்கு முழுமையாகப் பயன்பட வேண்டும். இதற்கு ஒன்றிய மாநில அரசுகள் அல்லது தனியார் நிறுவனங்கள் உதவினால், இந்தத் தொழில்நுட்பத்தை பரவலாகக் கொண்டு செல்வதன் மூலம், அவர்களின் நெடுநாள் ஏக்கத்தைத் தீர்க்க முடியும் என நம்புகிறேன்' என்கிறார்.

ஒன்றிய- மாநில அரசுக்கு கோரிக்கை
காலணி அணிந்த காலுடன் கழிவறைகளுக்கு உள்ளே நடந்துசெல்லும்போதுகூட அருவெறுப்புக் காட்டும் நாம் ஒரு கணமாவாது, கையை ஊன்றி தவழ்ந்து செல்லும் மாற்றுத்திறனாளிகளின் அவலம் குறித்து சிந்தித்திருப்போமா..?

ஒரு நொடி யோசித்துப் பார்த்தாலே தாள முடியாத வேதனை ஏற்படும் நிலையில், எளிய விஞ்ஞானி அப்துல் ரஸாக்கின் இந்தக் கண்டுபிடிப்பை எவ்வாறு ஊக்குவிக்காமல் கடந்து செல்ல முடியும்.

ஒன்றிய, மாநில அரசுகளே மாற்றுத்திறனாளிகளின் கழிப்பறை ஏக்கத்திற்கு என்று முடிவு கட்டுவதாய் உத்தேசம்..?
இதையும் படிங்க : கால்களால் ஓவியம் வரைந்த மாற்றுத்திறனாளி - அமிதாப் பாராட்டு

Last Updated : Oct 1, 2021, 12:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details