மகளின் நினைவாக ரூ.7 கோடி மதிப்பு சொத்தை அரசு பள்ளிக்கு எழுதிக் கொடுத்த மதுரை ஆயி பூரணம் அம்மாள் மதுரை:கடையேழு வள்ளல்களில் நமக்குத் தெரிந்தவர்கள் பாரி, பேகன், ஓரி. ஆனால், இவர்களின் வரிசையில் மற்றொருவர்தான் 'ஆய் அண்டிரன்'. இவர் தன்னை நாடி வந்த புலவர்களுக்கும் வறியவர்களுக்கும் இல்லையெனாது பரிசில்களை வாரி வழங்கியப் பெருவள்ளல். சுருக்கமாக இந்த மன்னனை ஆய் என்றே நமது சங்கப் புலவர்கள் அழைத்து மகிழ்ந்தனர். ஆய் என்பவன் கடையேழு வள்ளல்களில் ஒருவனாக இருக்கலாம். ஆனால் அவனது பெயரை பெண்பாலாகக் கொண்ட மதுரையைச் சேர்ந்த 'ஆயி என்ற பூரணம்' தனது கொடைப் பண்பால் இன்று உலகமெலாம் பேசுபொருளாக மாறியிருக்கிறார்.
ரூ.7 கோடி மதிப்புள்ள 1.52 ஏக்கர் அரசு பள்ளிக்கு தானம்:தன்னுடைய தந்தையாரிடமிருந்து தனக்கு வந்த 1.52 ஏக்கர் நிலத்தை, தன்னுடைய அன்பு மகள் உ.ஜனனியின் நினைவாக, தனது கிராமத்திலுள்ள பள்ளிக்கு தானமாக வழங்கியுள்ளார். 1.52 ஏக்கர் என சாதாரணமாக கடந்து செல்லலாம். மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒத்தக்கடை வேளாண் கல்லூரி அருகே அமைந்துள்ள இந்த நிலத்தின் வருவாய்த்துறை மதிப்பு சுமார் ரூ.4 கோடி. ஆனால், சந்தை மதிப்பு ரூ.7 கோடிக்கும் மேல் என எண்ணிப் பார்க்கும்போது ஆயி அவர்களின் கொடைப்பண்பு திகைக்க வைக்கிறது.
வங்கி பணியாளராக பணியாற்றும் பூரணம்: தன்னுடைய கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் படித்து அறிஞர்களாகவும், அதிகாரிகளாகவும் வாழ்க்கையில் உயர்வதற்காக தற்போதுள்ள நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற வேண்டுகோளோடு பள்ளிக்கல்வித்துறைக்கு பட்டா மாற்றிக் கொடுத்திருக்கிறார். மதுரை தல்லாகுளம் கனரா வங்கி கிளையில் எழுத்தராகப் பணியாற்றுகிறார். கனரா வங்கியில் காசாளராகப் பணியாற்றிய தனது கணவர் உக்கிரபாண்டியன் கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் காலமானதை அடுத்து, வாரிசு அடிப்படையில் தற்போதைய வேலை பூரணத்திற்குக் கிடைத்தது.
அப்போது இவரது அன்பு மகன் ஜனனிக்கு ஒன்றரை வயது. மிகக் கடுமையான வாழ்க்கைப் போராட்டத்தில் ஜனனியை வளர்த்து ஆளாக்கி, இளங்கலை வணிகவியல் வரை படிக்க வைத்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கரோனா தொற்று காலத்தில் எதிர்பாராதவிதமாக ஜனனி காலமானார். இதனால் நிலைகுலைந்து போன பூரணம், தனது மகளின் கனவுகளையெல்லாம் நனவாக்குவதற்காக தன்னை தயார்ப்படுத்திக் கொண்டார்.
ஜனனிக்கு அப்படியென்ன கனவு இருந்தது..?: இது குறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய ஆயி என்ற பூரணம், 'சிறு வயதிலேயே ஏழை, எளியவர்களுக்காக உதவ வேண்டும். படிக்க இயலாத மாணவ, மாணவியருக்கு இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என்பதுதான் ஜனனியின் நோக்கமாக இருந்தது. என்னுடைய அப்பா கண்ணன் சின்னான் அம்பலத்திற்கும் இதே போன்றுதான், எண்ணமும் சிந்தனையும் இருந்தது.
மதுரை பூரணம் அம்மாளின் மகள் ஜனனி அவர் காலத்தில் நிறைய ஏழை குழந்தைகளைப் படிக்க வைத்திருக்கிறார். அவர்களெல்லாம் இன்றைக்கு பெரிய பொறுப்புகளில் உள்ளனர். யா.கொடிக்குளத்தில் தற்போதுள்ள நடுநிலைப்பள்ளி கட்டிடம்கூட, எனது அப்பாவின் உடன் பிறந்தவர்களுடைய பூர்வீக வீடாகும். இவற்றையெல்லாம் நாங்கள் யாரும் சொல்லிக் கொள்வதேயில்லை. இந்த ஊருக்கு நாங்கள் ஆற்றும் கடமையாகத்தான் இவையெல்லாம் பார்க்கிறோம்' என்றார்.
ஜனனியே தன்னை இயக்குவதாக பூரணம் நெகிழ்ச்சி:தனது மகள் ஜனனி பொறியியல் படித்து, பொறியாளராக வர வேண்டும் என்பது பூரணத்தின் விருப்பமாக இருந்தாலும், ஜனனியோ ஆடிட்டர் ஆவதே தனது கனவாகக் கொண்டிருந்தார். அவர் இறப்பதற்கு முன்பும் கூட சார்ட்டட் அக்கவுண்டன்ட் படிப்புக்காக புத்தகங்கள் வாங்கி தேர்வு எழுதுவதற்கும் கூட தயாராக இருந்ததாகவும், அச்சமயத்தில் அவரது விருப்பத்தை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டதாகவும் குற்றவுணர்ச்சி மேலிட கண்ணீர் வடிக்கிறார். தனது மகள் ஜனனியின் பெயரை சொல்லும்போதெல்லாம் அவருக்குள் ஏதோ ஒரு உணர்வு தூண்டப்படுவதாகவும், ஜனனியே தன்னை இயக்குவதாகவும்' பூரணம் உணர்கிறார்.
ச்மதுரை பூரணம் அம்மாள் தானமாக வழங்கிய நிலம் எனது மகள் ஜனனியின் கனவை நிறைவேற்றுவோம்:மேலும் பேசிய பூரணம், 'என்னுடைய இந்த முயற்சிக்கு எனது சொந்த பந்தங்களோ அல்லது உடன் பிறந்த எனது மூத்த சகோதரிகள் 5 பேரும், மாமா உள்ளிட்ட யாருமே தடை கூறவில்லை. ஜனனியின் கனவை நாம் இணைந்து நிறைவேற்றுவோம் என்பதில் எனக்கு உறுதுணையாக இருந்தனர்.
ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சியே தனக்கு மகிழ்ச்சி:இன்னும் வேண்டுமானாலும் உதவி செய்வேன்: உயர்நிலைப்பள்ளியாக தரம் உயரும்போது ஆயிரம்பேராவது படிப்பார்கள். அவர்கள் அனைவருக்குள்ளும் என் மகள் ஜனனியைத்தான் நான் பார்ப்பேன். பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி, அதற்கான கட்டிடங்களைக் கட்டி, அந்தக் காட்சியைப் பார்க்கும்போதுதான், எனக்கு அளவில்லாத மகிழ்ச்சியும், பெருமிதமும் உண்டாகும். அதற்காக என்னால் இயன்ற உதவிகளை மேலும் மேலும் செய்வேன்' எனக் கூறினார்.
இவ்வளவு நல்லெண்ணம் கொண்டவரையும் மோசடி செய்தார்களா?:வெளியே யாருக்கும் தெரியாமல் இந்தப் பள்ளிக் குழந்தைகளுக்கு அவ்வப்போது உதவிகள் செய்து கொண்டே இருக்கிறார் பூரணம். தனக்கு இங்கு பாராட்டு விழா நடைபெற்ற அன்றுகூட, இந்தப் பள்ளியிலுள்ள சுமார் 200 குழந்தைகளுக்கு உடற்பயிற்சிக்கான பனியன் வழங்கி ஊக்குவித்தார். ஆனால், அவருக்குள்ளும் ஒரு சோகம் இழையோடிக் கொண்டிருக்கிறது. பெயர் பெற்ற யோகா அமைப்பு ஒன்றின் மதுரை நிர்வாகிகள் சிலர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவரது இடத்தில் 10 சென்ட் நிலத்தை தானமாகக் கேட்டுள்ளனர். இவரும் கொடுப்பதாக உறுதியளித்து கையொப்பமிட்டுள்ளார்.
இழந்த நிலத்தை மீட்க சட்ட போராட்டம்:ஆனால் பூரணத்திற்குத் தெரியாமல் 93 சென்ட் நிலத்தையும் அவர்கள் பெயருக்கு பத்திரப்பதிவு செய்து ஏமாற்றியுள்ளனர். இதனால் மனம் உடைந்துபோன பூரணம், அந்த நிலத்தைப் பெறுவதற்காக தற்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். பள்ளிக்காக தானம் கொடுக்கப்பட்ட நிலத்திற்கு அருகிலேயே இந்த இடமும் இருப்பதால், இதனையும் மீட்டு நல்ல காரியத்திற்கே பயன்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். நீதி, நிர்வாகத்துறை மட்டுமன்றி, பொதுமக்களின் துணையும் தனக்கு வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறார். நம்பியவர்கள் தன்னை ஏமாற்றிய துயரத்தின் வலி அவருக்குள் ஆறாத வடுவாக மாறியுள்ளதாக தெரியவருகிறது.
இயன்றவரை அனைவருக்கும் உதவுக: தொடர்ந்து பேசிய பூரணம், 'அனைத்து மக்களும் அவர்களால் முடிந்த உதவிகளை மனதாலோ, உழைப்பாலோ அல்லது பொருளாலோ தொடர்ந்து செய்யும் எண்ணத்தை அனைவரும் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள் மட்டுமல்ல.. எனது மகள் ஜனனியின் வேண்டுகோளும்கூட..' என்றார், முத்தாய்ப்பாக.
மகளின் ஆசையை நிறைவேற்றும் விதமாக பூரணம் செய்த நிலக்கொடை குறித்து பேசிய முத்துலட்சுமி, 'இப்பள்ளியில் எனது மகள் படிக்கிறாள். இவரின் நிலக்கொடையால், இங்குள்ள பெண் குழந்தைகள் உள்ளூரிலேயே உயர்படிப்பை மேற்கொள்ள வழிசெய்யும். இதனால், சுமார் 3 கி.மீ., வரை சென்று படித்து வரும் பெண் குழந்தைகள் உள்ளிட்டோருக்கு உள்ளூரிலேயே பயில முடியும். இதனை நாங்கள் முழு மனதுடன் வரவேற்கிறோம்' என்றார்.
சத்தமில்லாமல் சேவையாற்றும் எளிமையான பெண்: இது குறித்து பேசிய யா.கொடிக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சம்பூரணம், பூரணம் அம்மாவின் நிலக்கொடை குறித்த தகவல் இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. இப்பள்ளி குழந்தைகளுக்கு 2 ஆண்டுகளாக நோட்டு, புத்தகங்கள் வழங்கியது, கழிவறை, போர்வெல் ஆகியவற்றையும் அமைத்துக் கொடுத்தது என பல உதவிகளை செய்துள்ளார். தான் படித்த பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த மேற்கொண்ட முயற்சியின் ஒரு பகுதியாக, தனது 1.52 ஏக்கர் நிலத்தை தானமாக அளித்துள்ளார்.
அரசு உடனடியாக உயர்நிலைப்பள்ளி அமைக்க கோரிக்கை: ஒருவரும் இடையில் படிக்காமல் நின்றுவிடக்கூடாது எனவும், பள்ளியில் இடைநிற்றலைத் தடுக்க அதிக அக்கறையுடனும் செயல்பட்டுவரும் பூரணம் அம்மாளுடன், தமிழக அரசும் பள்ளிக்கல்வித்துறையும் இணைந்து உடனடியாக, உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்' என்றார்.
பூரணம் அம்மாளின் அக்காள் கணவர் சேதுராமன் கூறுகையில், 'பள்ளிக்கல்வித்துறையில் 31 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். என்னுடைய மாமனார் இங்கு உயர்நிலைப்பள்ளி கொண்டுவர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், ஒத்துழைப்பின்மை காரணமாக அவரது ஆசை நிறைவேறாமல் போனது.
ஔவை இருந்தால் வள்ளலான உமைப் பற்றியும் பாடியிருப்பார்:இந்நிலையில் பூரணம் தனது நிலத்தை தானமாக அளிக்க முன் வந்ததிலிருந்து, அதற்கானப் பணிகளில் நானும் முனைப்பாக இறங்கினேன். கடந்த வாரம்தான் இதற்கான பத்திரப்பதிவு நடந்தது. இந்தப் பள்ளிக்கூடத்துக்கு பின்புறமுள்ள தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை எனது மாமா உக்கிரபாண்டியன், ஏழை மக்களுக்கு பட்டா போட்டுக் கொடுத்தார். அதில், இப்போது நிறைய குடும்பங்கள் வசிக்கின்றன' என்றார்.
ஏழைகளுக்காகவும், ஏழை மாணவர்களின் கல்விக்காகவும் யா.கொடிக்குளம் கிராமத்தில் கடந்த மூன்று தலைமுறைகளாகவே பூரணம் அம்மாவின் குடும்பம் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அதன் வழித்தோன்றலாக ஆயி பூரணம் அம்மா, தனது மகள் உ.ஜனனியின் நினைவாக இந்த நிலக்கொடையை அளித்துள்ளதை கடையேழு வள்ளல்களில் ஒருவனான ஆய் அண்டிரனோடு ஏன் ஒப்பிட்டால் அது மிகையாகாது.
இதையும் படிங்க:சென்னையில் இலவச ஆட்டோ சேவையை வழங்கிய நடிகர் பாலா.. அரசியலுக்காக செய்யவில்லை என பேச்சு!