மதுரை:சு. வெங்கடேசன் எம்பி நிர்மலா சீதாராமனை இன்று (டிசம்பர் 14) சந்தித்துப் பேசினார். சந்திப்பு தொடர்பாக சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
'சுங்குடி சாரீஸ்' மதுரையின் அடையாளங்களில் ஒன்று. மொழிச் சிறுபான்மையினராக உள்ள சௌராஷ்டிரா சமூகத்தைச் சார்ந்த மக்கள் இத்தொழிலில் பராம்பரியமாக ஈடுபட்டுவருகிறார்கள்.
கைக்கட்டு வடிவமைப்பு, மெழுகு பிரிண்ட் வடிவமைப்பு, ஸ்கிரீன் பிரிண்ட் வடிவமைப்பு, சாயமிடுதல், சலவை செய்தல் போன்ற பணிகள் இத்தொழிலில் உள்ளடக்கம். 10 ஆயிரம் குடும்பங்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளன.
12% வரிவிதிப்பு
விவசாய கூலிப்பெண்கள், மீனவப் பெண்கள் உள்ளிட்ட அடித்தட்டு மக்கள் அணியும் உடையான இச்சுங்குடி சேலை தயாரிக்கும் தொழில் 1995இல் குடிசைத் தொழிலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சிறப்பான, நேர்த்தியான இச்சேலைகளுக்கு 'புவிசார் குறியீடு'ம் 2005இல் வழங்கி மத்திய அரசு கெளரவித்துள்ளது.
இத்தகு பெருமைவாய்ந்த சுங்குடி சேலை தயாரிக்கும் தொழில் மத்திய அரசின் வரி விதிப்புக் கொள்கையால் பாதிப்பிற்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. முற்றிலும் வரி விலக்கு அளிக்க வேண்டிய இத்தொழிலுக்கு 2017ஆம் ஆண்டு ஐந்து விழுக்காடு வரி விதித்தது மத்திய அரசு.
தற்பொழுது 12 விழுக்காடாக உயர்த்தி ஜனவரி 1ஆம் தேதிமுதல் அமலாகும் என்று மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. எளிய மக்களைப் பாதிக்கும் இவ்வரி உயர்வை உடனடியாகக் கைவிட வேண்டும் என மத்திய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் நேரில் வலியுறுத்தினேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:ஈபிஎஸ் - ஓபிஎஸ்க்கு எதிரான வழக்கு தள்ளுபடி!