மதுரை:தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், பட்டியலின மக்களுக்கு இலவச பஞ்சமி நிலங்கள் ஆங்கிலேயர் காலத்தில் வழங்கப்பட்டன. இந்தப் பஞ்சமி நிலங்கள் பட்டியலின சமுதாய மக்களை முன்னேறுவதற்காக வழங்கப்பட்டது. அவர்கள், விவசாயம் அல்லது தொழில் செய்து தங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற வழங்கப்பட்டது. ஆனால், வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பஞ்சமி நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து சட்டவிரோதமாக தங்கள் பெயர்களுக்கு நிலங்களை பெயர் மாற்றம் செய்து கொள்கின்றனர். இது சட்டவிரோத செயலாகும்.
மேலும், சில பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் இருந்து மீட்டு பட்டியலின மக்களின் வாரிசுதாரர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு, வாரிசுத்தாரர்கள் அனுபவித்து வருகிறார்கள். இதுபோன்று தமிழ்நாடு முழுவதும் பல ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் பஞ்சமி நிலங்கள் வேறு சமுதாய மக்கள் ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வருகின்றனர்.