மதுரை:மனிதன் கையால் மலம் அள்ளுவதைத் தடுக்க வேண்டும் எனவும், அவர்களுக்குத் தேவையான மறுவாழ்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடவும் உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இது குறித்த விசாரணையில் கழிவுநீர் மற்றும் சாக்கடைகள் இயந்திரங்கள் மூலம் மட்டும் அகற்றுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது.
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் நாகராஜன் தாக்கல் செய்த மனுவில், 'கையால் மலம் அள்ளத் தடை மற்றும் மறுவாழ்வுக்கான சட்டம் 2013ல் கொண்டு வரப்பட்டது. சட்டம் அமலாவதைக் கண்காணிக்கும் வகையில் மாநிலந்தோறும் கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும். இவர்கள் ஆய்வுகள் மேற் கொண்டு இந்த பணியில் ஈடுபட்டுள்ளவர்களைக் கண்டறிய வேண்டும். மறுவாழ்வுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். தொழில்நுட்ப ரீதியிலான உபகரணங்கள் இல்லை. சட்டத்தை மீறி பணியில் ஈடுபடுத்துவோர் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப் படுவதில்லை. ரயில்வே மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் இன்னும் பலர் தொடர்ந்து கையால் அள்ளும் பணியில் தான் ஈடுபட்டுள்ளனர். எனவே, இவர்களை கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் என அறிவிக்க வேண்டும். மத்திய, மாநில அளவிலான கண்காணிப்புக் குழுக்களையும், மாவட்ட அளவிலான விழிப்புணர்வு குழுக்களையும் அமைக்க வேண்டும். கையால் மலம் அள்ளுவதைத் தடுக்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான மறுவாழ்வை ஏற்படுத்த வேண்டும் என கூறியிருந்தார். இதேபோல் மேலும் சிலர் மனு செய்திருந்தனர்.