மதுரை:தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் மே 25ஆம் தேதி, எனது மனைவிக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. இதைத் தொடர்ந்து குழந்தையின் இடது கையில் மருந்து ஏற்றுவதற்காக ஊசி பொருத்தப்பட்டது.
ஜூன் 7ஆம் தேதி குழந்தையின் கையிலிருந்து ஊசியைப் எடுக்க முயன்ற போது செவிலியரின் கவனக்குறைவால் இடதுகை கட்டைவிரல் வெட்டப்பட்டது. இதனால் பதற்றம் அடைந்த எனது மனைவி மற்றும் அவரது தாயார் மருத்துவர்களை அழைத்தனர்.
அதைத் தொடர்ந்து இடது கை கட்டை விரலை சேர்ப்பதற்கு, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். ஆனால், அதற்கான பலன்கள் எதுவும் இல்லை.
துரித நடவடிக்கை எடுக்காத மருத்துவமனை நிர்வாகம்
கட்டை விரலை சேர்ப்பதற்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்துவமனை நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் குழந்தையின் கட்டை விரல் சேர்க்க முடியாமல் போனது. மருத்துவமனையில் சுமார் 1,200 உள்நோயாளிகள் உள்ளனர். ஆனால், அவர்களுக்கு குறைந்த அளவிலான செவிலியர் உள்ளதால் இது போன்ற கவனக்குறைவு ஏற்படுகிறது.