தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 10, 2020, 4:27 AM IST

ETV Bharat / state

'ஆன்லைனில் புக் செய்து மணல் கிடைக்க உரிய விதிமுறைகள் வகுக்க வேண்டும்'- நீதிமன்றம்

மதுரை: கட்டட வரைபட அனுமதி வைத்துள்ளவர்கள் ஆன்லைனில் புக் செய்து  மணல் கிடைக்க உரிய விதிமுறைகளை வகுக்க வேண்டும் இது குறித்து தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை கிளை
மதுரை கிளை

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த தங்கவேல் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், கட்டடங்கள் கட்டுவதற்கு ஆற்று மணல் அவசியம் தேவைபடுகிறது.
தமிழ்நாடு அரசு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு குறைந்த விலையில் விநியோகிக்கப்படுவதாக அறிவித்திருந்தது.

நானும் என்னைப் போல் பொதுமக்களும், அவர்களது கட்டடங்கள் கட்டுவதற்கு தமிழ்நாடு மணல் இணையதள சேவை மூலம் பலமுறை விண்ணப்பம் செய்ய முயற்சி செய்தோம்.
ஆனால் இணையதள சேவையில் பொதுமக்கள் நுழைவு, லாரி உரிமையாளர்கள் நுழைவு என இரண்டு உள்ளது.

பொதுமக்கள் நுழைவு மூலம் உள்சென்று மணலை புக்கிங் செய்ய வேண்டும். அதுவும் வெள்ளிக்கிழமை மட்டும் தான் புக்கிங் செய்ய இயலும் என குறிப்பிட்டுள்ளது. பலமுறை இணையதளம் மூலம் புக்கிங் செய்ய முயற்சி செய்த போது அந்த இணையவழி திறக்கவில்லை. அப்படியே திறந்தாலும் மண் புக்கிங் முடிந்துவிட்டதென்று பதில் வருகிறது.
கடந்த 14.08.2020 , 21.08.2020 , 28.08.2020 , 04.09.2020 , 11.09.2020 , 18.09.2020 & 25.09.2020 ஆகிய பல வெள்ளிக்கிழமை தேதிகளில் தமிழ்நாடு மணல் இணைய சேவையில் ஆன்லைன் புக்கிங் செய்ய முயற்சித்த போது குவாரி லிமிட் ரீச்டு என்று தெரிவிக்கப்படுகிறது.
ஆகையால் ஆன்லைன் மூலம் புக்கிங் செய்ய முடியவில்லை. இதுபோல் பல பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். அதே சமயம் மணல் லாரி வைத்திருப்பவர்கள், இடைத்தரகர்கள் ரூ.40 ஆயிரத்திற்கு விற்பனை செய்கிறார்கள்.
அரசாங்கத்திடம் ரூ.6,500க்கு மண்ணைப் பெற்று கொள்ளை லாபத்திற்கு அப்பாவி பொதுமக்களிடம் விற்பனை செய்கின்றனர்.
இதுதொடர்பாக உயர் அலுவலர்களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே நீதிமன்றம் உடனே கவனித்து, அனைத்து பொதுமக்களும் ஆன்லைன் வழியில் புக்கிங் செய்து நியாயமான விலைக்கு மண் கிடைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது
அரசு மணல் குவாரி திட்ட இயக்குநர் அருண் தம்புராஜ் கூறுகையில், எவ்வளவு மணல் எங்களிடம் உள்ளதோ அந்த அளவுக்கு தான் ஆன்லைனில் புக்கிங் செய்ய முடியும். வாகன பதிவெண், உரிமம் உள்ளிட்டவைகளை சரி பார்த்து கொள்கிறோம்.
தற்போது மணல் போதுமானதாக இல்லை. இருப்பு உள்ள அளவுக்கு ஆன்லைனில் பதிவு செய்கிறோம். ஒவ்வொரு இடத்தின் தூரத்தை பொருத்து மணல் விலை அதிகமாகி உள்ளது.
வீடுகளுக்கே சென்று அரசு மணல் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
அப்போது நீதிகள், அரசு மணல் குவாரியில் ஒரு யூனிட் ரூ. 2 ஆயிரத்திற்கும் குறைவு. இறக்குமதி மணல் ரூ. 10, 000. ஆனால் வெளி மார்கெட்டில் ஒரு யூனிட் மணல் ரூ. 15 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லோடு ரூ. 45,000 விற்பனை செய்யப்படுகிறது.
பொது மக்களுக்கு இலகுவாக மணல் கிடைக்குமா? பொது பணித்துறை குவாரியில் ஒன்றும் பிரச்னையை இல்லை.
ஆனால் அந்த மணல் சாதாரண மக்களுக்கு சரியான விலையில் கிடைக்கிறதா? இடையில் இடைதரகர்களால் பொது மக்களுக்கு கூடுதல் விலையில் மணல் விற்பனை செய்யப்படுகிறது ? ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் மணல் இடை தரகர்களால் கூடுதல் விலைக்கு விற்பனையாகிறது.
100 லோடு மணல் ஒரு வீடு கட்ட தேவைப்படும். அவர்களுக்கு 100லோடு மணல் அரசு ஆன்லைனில் கொடுக்க வேண்டாம்.
குறைந்தது 2 லோடு மணலாவது கொடுக்கலாம். எனவே இடைதரகர்கள் குறுக்கீடு இல்லாமல், சாதாரணமாக வீடு கட்டும் நபருக்கு உரிய விலையில் ஆன்லைனில் புக் செய்து மணல் கிடைக்க உரிய வழி வகைகளை வகுக்க வேண்டும்.
கட்டட வரைபட அனுமதி வைத்துள்ளவர்கள் ஆன்லைனில் புக் செய்து இலகுவாக மணல் கிடைக்க உரிய விதிமுறைகளை வகுக்க வேண்டும். இது குறித்து தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட வழக்கு விசாரணை அக்டோபர் 28ஆம் தேதி தள்ளிவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details