தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த செல்வராணி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்செய்திருந்தார். அதில், "சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் காவல் துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு உயிரிழந்தனர்.
இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளை விசாரித்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில், வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது.
கடந்த டிசம்பர் 10ஆம் தேதி வழக்கு விசாரணைக்காக குற்றவாளிகள் அனைவரும் முன்னிறுத்தப்பட்டனர். அப்போது காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உறவினரின் செல்போன் மூலமாக யாரிடமோ பேசி, 36 லட்சம் ரூபாயை வழங்கிவிடுமாறு மிரட்டிக்கொண்டிருந்தார்.
இது தொடர்பாக நீதித் துறை நடுவரின் கவனத்திற்கு கொண்டுசென்ற நிலையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என நம்புகிறேன். அன்றைய நாளே குற்றவாளிகள், காவல் துறையினர், செய்தியாளர்களை மிரட்டியதோடு, மோசமான வார்த்தைகளில் அவர்களைத் திட்டினர்.
பணபலம் காரணமாகச் சாட்சிகளை மிரட்டி, கலைக்க வாய்ப்புள்ளது. ஆகவே மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கு விசாரணையை குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்து அதற்குள் முடிக்குமாறு உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முரளி சங்கர் இது குறித்து சிபிஐயின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: சுகாதாரப் பணியாளர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரிய வழக்கு - சுகாதாரத் துறை பதிலளிக்க மதுரைக்கிளை உத்தரவு!