தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நீதிமன்ற உத்தரவை நீதித்துறையே பின்பற்றுவதில்லை' - நீதிபதி வேதனை! - hurting

மதுரை: 'நீதிமன்ற உத்தரவை நீதித்துறையே பின்பற்றாததது வேதனை அளிக்கிறது' என்று, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

By

Published : Jun 8, 2019, 8:14 PM IST

தேனியைச் சேர்ந்த திருமலைக்குமாரசாமி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், 2011ஆம் ஆண்டு ஒரு பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"தேனி மாவட்ட நூலகத்தில் இளநிலை உதவியாளராக 1998-ல் பணியில் சேர்ந்தேன். 2007-ல் உதவியாளராக பதவி உயர்வு பெற்றேன். என்னை சென்னைக்கு பணியிடமாற்றம் செய்த நூலகத்துறை இயக்குனர் 10.12.2010-ல் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இடமாறுதலுக்கு தடை விதிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனுவை 2012யில் விசாரித்த நீதிமன்றம், இடமாறுதல் உத்தரவுக்கு தடை விதித்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், "மனுதாரர் நிர்வாக காரணத்துக்காக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். அந்த உத்தரவுக்கு உயர் நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்று எட்டரை ஆண்டுகளாக தேனி அலுவலகத்திலேயே பணிபுரிந்து வருகிறார். இடமாறுதல் பணி விதிகளில் ஒன்றாகும். இடமாறுதல் செய்யப்படும் இடத்தை சம்பந்தப்பட்ட ஊழியர் முடிவு செய்ய முடியாது.

இடமாறுதல் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர குறிப்பிட்ட காரணங்கள் மட்டுமே உண்டு. நிர்வாக காரணங்களுக்காக வழக்கமாக செய்யப்படும் இடமாறுதலில் உயர் நீதிமன்றம் தலையிட்டால் நிர்வாகப் பணிகளில் பாதிப்பு ஏற்படும். இதனால் நிர்வாக காரணங்களுக்காக செய்யப்படும் இடமாறுதல்களை எதிர்த்து வழக்கு தொடர்வதை உயர் நீதிமன்றம் ஊக்குவிக்கக்கூடாது.

இந்த வழக்கை பொருத்தவரை மனுதாரர் உயர் நீதிமன்றத்தில் இடைக்கால தடை ஆணை பெற்று எட்டரை ஆண்டுக்கு மேலாக ஒரே இடத்தில் பணிபுரிந்து வருகிறார். மனுதாரர் தனது இடமாறுதல் உத்தரவு நூலக ஆணைய சட்டத்துக்கு எதிரானது எனக் கூறியுள்ளார். ஆனால் பிற அரசு ஊழியர்களுக்கான சலுகையை பெற்று வருகிறார். மனுதாரரின் இந்த இரட்டை நிலைப்பாட்டை ஏற்க முடியாது. இதனால் மனுதாரர் இடமாறுதல் செய்யப்பட்ட இடத்தில் பணியில் சேர வேண்டும். அங்கு பணியிடம் காலியாக இல்லாவிட்டால் மனுதாரரை வேறு இடத்துக்கு நான்கு வாரத்தில் இடமாறுதல் செய்ய வேண்டும்.

தடையை நீக்கக்கோரும் மனுக்களை வழக்கு எண் வழங்கப்பட்டதில் இருந்து 2 வாரத்தில் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும். 2 வாரத்தில் தடையை விலக்கக்கோரும் மனுக்களை விசாரணைக்கு பட்டியலிடாத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை பின்பற்ற அனைத்து அலுவலர்களுக்கு உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இருப்பினும் இந்த உத்தரவை உயர் நீதிமன்ற பதிவுத்துறை பின்பற்றவில்லை.

நீதித்துறையின் உத்தரவை நீதித்துறையே பின்பற்றாததது வேதனையானது. தடையை விலக்கக்கோரும் மனுக்களை விசாரணைக்கு பட்டியலிடுவது தொடர்பாக உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் பிறப்பித்த உத்தரவுகளை உயர்நீதிமன்றங்களில் உள்ள பதிவுத்துறை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்" என்று உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details