தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செங்கல் சூளைகளுக்கு மண் கடத்தல் வழக்கு: திண்டுக்கல் ஆட்சியர் பதிலளிக்க நீதிமன்றம் ஆணை!

திண்டுக்கல் மாவட்டம், ஆயக்குடி பேரூராட்சி பகுதியில் செங்கல் சூளைகளுக்காக செம்மன் கடத்தலை தடுக்கக்கோரிய வழக்கில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் புவியியல் மற்றும் சுரங்க உதவி இயக்குநர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளனர்.

செங்கல் சூளைகளுக்காக செம்மன் கடத்தல் வழக்கில் திண்டுக்கல் ஆட்சியர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.
dindigul-seman-smuggling-case-in-mhmb

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2023, 3:45 PM IST

மதுரை: திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா, ஆயக்குடி பகுதியை சேர்ந்த கனிதா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொது நல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், "திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகாவிற்கு உட்பட்ட ஆயக்குடி பேரூராட்சி பகுதிகளான சத்தப்பாறை, பாப்பாகுளம் வாய்க்கால் உள்ளிட்ட கிராமங்கள் மேற்கு தொடர்ச்சி மலையின் கீழ் பகுதியில் அமைந்துள்ளன.

இப்பகுதிகள் காடுகள் நிறைந்த பகுதிகளாக உள்ளது. இதே போல் பொன்னிமலை சித்தர் கோயில், மீன்பாறை, கன்னிமார் கோயில், சாத்தப்பாறையில் வண்ணாந்துறை, பாப்பாகுளம் வாய்க்கால் ஆகிய கிராமங்கள் மேற்கு தொடர்ச்சமலையின் எல்லையாக உள்ள நிலையில் இப்பகுதிகளில் இருந்து சட்டத்திற்கு விரோதமாக அதிகளவில் செம்மண், மணல் அள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக சாத்தப்பாறை மற்றும் பாப்பாகுளம் கிராமங்களில் ஏராளமான மணல் கொள்ளையடிக்கும் கும்பல் செயல்பட்டு வருகிறது. பொன்னிமலை சித்தர் கோயில், மீன்பாறை, கன்னிமார் கோயில், வண்ணாந்துறை அருகே உள்ள வனத்துறைக்கு சொந்தமான நிலங்களிலும் டிப்பர் லாரிகள் மற்றும் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் சமூக விரோதிகளை வைத்து தொடர்ந்து மணல், செம்மன் அனுமதி பெறாமல் அள்ளி வருகின்றனர்.

இதையும் படிங்க:சிறப்பு நீதிமன்றத்தில் துவங்கிய விசாரணை... நேரில் ஆஜரான எஸ்.வி.சேகர்.. அடுத்து என்ன?

இப்பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதோடு, வரதமாநதி அணை நீர்பிடிப்புப் பகுதிகளில் இருந்து நீர்வரத்து வருவது குறைந்து வருகின்றன. நீர்வரத்து குறைவின் காரணமாக இப்பகுதியில் வாழும் வனவிலங்குகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுகிறது.

இதனால் தண்ணீர் தேடி வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விடுகின்றன. வனவிலங்குகள் நடமாட்டத்தினால் இப்பகுதியில் வசிக்கும் மக்களின் உயிருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்." என மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரதசக்கரவர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வழக்கு குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், புவியியல் மற்றும் சுரங்க உதவி இயக்குநர் வரும் செப்டம்பர் 11ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க:ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் மோசடி - மீட்குமா காவல் துறை?

ABOUT THE AUTHOR

...view details