கடந்த மே 1ஆம் தேதி மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் முயற்சியில் பல்வேறு தன்னார்வலர்களின் உதவியோடு 'மாமதுரையின் அன்னவாசல்' என்ற பெயரில் வறியோர்க்கு உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. உணவோடு மே 10ஆம் தேதி முதல் முட்டையும் வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மதுரையில் தனித்திருப்பவர்கள், கைவிடப்பட்டவர்கள், கவனிப்பாரற்ற முதியவர்கள் என உணவு சமைத்து சாப்பிட வழியின்றி தவிக்கும் விளிம்பு நிலை மக்களுக்கு மதிய உணவினை அவர்களின் இருப்பிடம் சென்று தருகின்ற முயற்சியினை கடந்த மே 1 ஆம் தேதி "மாமதுரையின் அன்னவாசல்" என்ற பெயரில் தொடங்கினோம்.
கொடையாளர்களின் பொருளுதவியோடு, இருநூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் மற்றும் தன்னார்வலர்களின் கூட்டு முயற்சியால் நாள்தோறும் மூவாயிரம் பேருக்கு மதிய உணவு வழங்கிக் கொண்டிருக்கிறோம். நோய் எதிர்ப்பாற்றல், இந்த ஒற்றைச் சொல்தான் இன்றளவில் கரோனாவிற்கு எதிரான உலகின் ஒரே ஆயுதம்.