தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மனநலம் பாதிக்கப்பட்டவர் மீதான கொலை வழக்கில் கீழமை நீதிமன்ற உத்தரவு ரத்து - நீதிமன்ற தீர்ப்பு

மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் செய்த கொலை வழக்கில் மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

மதுரை உயர்நீதிமன்ற கிளை
மதுரை உயர்நீதிமன்ற கிளை

By

Published : Jul 27, 2022, 3:52 PM IST

மதுரை: தஞ்சாவூர் மாவட்டம், திருத்துறைபூண்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன் மனநல பாதிப்பக்காக 2015-ல் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இதே தர்காவில் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த அப்துல் நாசரும் மனநல சிகிச்சைக்காக தங்கியிருந்தார்.

அப்போது தர்ஹாவில் கடந்த 2.9.2015-ல் பாலமுருகனுக்கும், நாசருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பாலமுருகன் அங்கிருந்த பனை மட்டையை எடுத்து நாசரை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த நாசர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதையடுத்து ஏர்வாடி தர்கா காவலர்கள் கொலை வழக்குப் பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த ராமநாதபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் பாலமுருகனுக்கு சிறை தண்டனை விதிக்காமல், ரூ.10,100 அபராதம் விதித்து, அதில் ரூ.10 ஆயிரத்தை இறந்த நாசரின் குடும்பத்துக்கும், ரூ.100-யை அரசுக்கும் வழங்க வேண்டும். பாலமுருகனை சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும் என 15.12.2017-ல் தீர்ப்பளித்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி பாலமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் 2 ஆண்டுகளாகவே மனநல பாதிப்பில் இருந்துள்ளார். அவருக்கும் நாசருக்கும் முன்விரோதம் இருந்ததில்லை. பக்கத்தில் இருந்த நாசர் தொடர்ந்து சாயா (டீ) கேட்டதால், தொந்தரவு தாங்காமல் அவரை மனுதாரர் தாக்கியுள்ளார். இது துரதிஷ்டவசமானது. இதனால் கீழமை நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.

மேலும் மனநலம் பாதிக்கப்பட்டவரை அதே நேரத்தில் கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையில் இருந்து விடுவிக்க உத்தரவிட முடியாது. மனுதாரரின் தந்தை கீழ்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து மனுதாரை பார்த்துக்கொள்வதாக உறுதியளித்து கடிதம் அளித்தால் கீழமை நீதிமன்றம் திருப்தியடையும் நிலையில் மனுதாரரை தந்தையிடம் ஒப்படைக்கலாம்.

மனுதாரருக்கு தொடர் சிகிச்சை தேவை என கருதினால், தண்டனை கைதியாக இல்லாமல், உள் நோயாளியாக சிகிச்சை அளிக்க கீழமை நீதிமன்றம் உத்தரவிடலாம். இந்த வழக்கில் சட்டப்பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞர் சாமிதுரையின் பணி பாராட்டுக்குரியது என உத்தரவில் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க:ஈரோட்டில் தேசிய புலனாய்வு முகமை திடீர் சோதனை

ABOUT THE AUTHOR

...view details