மதுரை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் 3 மாதங்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பணிக்கு மாற்றப்படுவது வழக்கம். தற்போது உயர் நீதிமன்ற கிளையில் நீதிபதி ஆர்.சுப்பிரமணியம் தலைமையில் வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதிகளின் 3 மாத பணிக்காலம் இந்த வாரத்துடன் முடிகிறது.
இதனையடுத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜூலை 3 முதல் பணிபுரியும் நீதிபதிகள் மற்றும் அவர்கள் விசாரிக்க உள்ள வழக்குகளின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் முதல் அமர்வில் 3.7.2023 முதல் 7.7.2023 வரை பொது நல மனு, 2022ஆம் ஆண்டு முதலான ரிட் மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்கின்றனர்.
10.7.2023 முதல் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் முதல் அமர்வில் பொது நல மனுக்கள், ரிட் மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்கின்றனர். நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், எம்.நிர்மல் குமார் ஆகியோர் இரண்டாவது அமர்வில் ஆட்கொணர்வு மனுக்கள், குற்றவியல் மேல்முறையீடு மனுக்களையும், நீதிபதிகள் அனிதா சுமந்த், ஆர்.விஜயகுமார் ஆகியோர் 3வது அமர்வில் உரிமையியல் மேல்முறையீட்டு மனுக்கள், 2021 வரையிலான ரிட் மேல்முறையீடு மனுக்களையும், நீதிபதி பி.வேல்முருகன், 3.7.2023 முதல் 14.7.2023 வரை 2016 வரையிலான இரண்டாவது மேல்முறையீட்டு மனுக்களையும் விசாரிக்கின்றனர்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 2019 வரையிலான கனிமம், நில உச்சவரம்பு, நில சீர்திருத்தம், நிலம் கையகப்படுத்தல், சுதந்திர போராட்ட தியாகிகள் ஓய்வூதியம் தொடர்பான மனுக்களையும், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி 17.7.2023 முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான இரண்டாவது மேல்முறையீட்டு மனுக்களையும், நீதிபதி பி.புகழேந்தி 2022ஆம் ஆண்டு முதலான கனிமம், நில சீர்த்திருத்தம், நில உச்சவரம்பு, நிலம் கையகப்படுத்தல் தொடர்பான மனுக்களையும் விசாரிக்கின்றனர்.