மதுரை: திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், "தமிழ்நாடு தேர்தல் ஆணையம் நடத்தும் ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கலின் போது, வேட்பாளர் மற்றும் அவரது குடும்பத்தாரின் சொத்து விபரங்கள், வழக்கு மற்றும் தண்டனை விபரங்களை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும். இந்த வேட்புமனு மற்றும் பிரமாண பத்திரத்தினை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆனால் தற்போது நடைபெற்ற ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் பயன்படுத்தப்பட்ட பிரமாண பத்திரம், கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வடிவில் இருந்தது.
இதில் வேட்பாளர், வாழ்க்கைத் துணை மற்றும் வேட்பாளரை சார்ந்தவர்களின் கடந்த ஐந்து ஆண்டு வருமானம், வருவாய் ஆதாரங்கள் குறித்த விவரங்கள், அரசின் துறைகளில் எடுக்கப்படும் ஒப்பந்தங்கள் குறித்த விவரங்கள், நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் குறித்த விவரங்கள், ஆதார் எண், ஆதார் முகவரி போன்ற விவரங்கள் கோரப்படவில்லை.