மதுரை: நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த சகா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில்,"தமிழகத்தில் 135 மத்திய சிறைகள், 3 பெண்களுக்கான சிறப்பு சிறைகள், 103 துணை சிறைகள், 10 பெண்களுக்கான துணை சிறைகள், இவை தவிர 7 சிறப்பு துணை சிறைகள் உள்ளன.
பெரும்பாலான சிறைகளில் அதற்கான முறையான உள் கட்டமைப்பு வசதிகள் இல்லை. காற்றோட்டம் மற்றும் வெளிச்சம் இல்லை. சிறை கைதிகளுக்கான விதிகளிலும் சிறைகளில் நூலக வசதி ஏற்படுத்தப்பட வேண்டும். அது அனைத்து கைதிகளுக்கும் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும் என உள்ளது.
ஆனால் பெரும்பாலான சிறைகளில் இவை முறையாக நடைமுறைப்படுத்தவில்லை. ஆகவே தமிழகத்தின் அனைத்து சிறைகளிலும் நூலகத்திற்கான உள் கட்டமைப்பு வசதிகள், டிஜிட்டல் நூலகங்கள் உருவாக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு,"பல நேரங்களில் கைதிகளின் உளவியல் சிக்கல்களுக்கு தீர்வாக இவை உதவும். சிறைகளில் நூலகங்கள் வைக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது என குறிப்பிட்டு, வழக்கு தொடர்பாக தமிழக சிறைத் துறை கூடுதல் செயலர், உள்துறை செயலர் பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:கோயில்களில் செல்போனுக்குத் தடை விதிக்க உத்தரவு