தமிழ்நாடு, புதுச்சேரியில் நீதிமன்றங்களை உடனடியாக திறக்கக்கோரி அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பு சார்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை முன்பு கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டது.
நாடு முழுவதும் ஊரடங்கில் தளர்வு கொண்டு வரும் சூழலில் மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் 50 விழுக்காடு ஊழியர்களுடன் தகுந்த இடைவெளியை பின்பற்றி பணியாற்றலாம் என்ற புதிய உத்தரவையடுத்து, அனைத்து தனியார் நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.
இச்சூழலில் தகுந்த இடைவெளியை பின்பற்றி நீதிமன்றத்தை நடத்த மத்திய, மாநில அரசுகள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும், நலிவடைந்த வழக்கறிஞர்களுக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், நிபந்தனைகளின்றி வங்கிகளில் கடன் உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை முன்பாக வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஏராளமான வழக்கறிஞர்கள் கருப்புக்கொடி ஏந்தியும் உடனடியாக நீதிமன்றங்களை திறக்கக்கோரி பதாகைகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.