மதுரை மாவட்டம், திருமங்கலம் கற்பகநகர் அருகேயுள்ள ஆறுமுகம் நகரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் (45). இவரது மனைவி விஜி (35), இவர்களுக்கு 10 வயதில் ஹரி ஸ்ரீ (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்ற பெண் குழந்தை உள்ளது. இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்ற நிலையில், ஹரிகிருஷ்ணன் தனது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார்.
அதேபோல், பசும்பொன் தெருவில் வசித்து வருபவர் யோகா ஆசிரியை சித்ராதேவி (32). இவரும் கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்த நிலையில் தனது தந்தை கண்ணையாவுடன் வசித்து வந்தார். இந்நிலையில், ஹரிகிருஷ்ணனின் மகள் ஹரி ஸ்ரீ சித்ராதேவியிடம் யோகா பயின்று வந்துள்ளார். தனது மகளை யோகா வகுப்பிற்கு அனுப்புவதற்காக ஹரிகிருஷ்ணன் சென்று வரும் சமயத்தில், சித்ராதேவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி சித்ராதேவி இரு சக்கர வாகனத்துடன் காணாமல் போனார். ஏப்ரல் 5 ஆம் தேதி தனது மகள் காணாமல் போனதாக கண்ணையா திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணனுக்கும், தனது மகளுக்கும் தொடர்பு இருந்ததாகக் கூறி அவர்கள் இருவரும் செல்போனில் பேசியதையும் பதிவு செய்து கொடுத்துள்ளார்.
தொடர்ந்து ஹரிகிருஷ்ணனே தனது மகளை கொலை செய்து இருக்கலாம் என்று திருமங்கலம் துணை கண்காணிப்பாளர் வினோதி, மதுரை காவல் ஆணையர், முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் கண்ணையா புகார் மனு அளித்துள்ளார். ஆனால், காவல் துறையினர் இது தொடர்பாக விசாரணை எதுவும் செய்யாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று (மே. 4) காலை வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.