மதுரையைச் சேர்ந்த முருக கணேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல்செய்திருந்தார். அந்த மனுவில், "காவல் நிலையங்களில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்புப் பணியில் உள்ள காவலரை தனிப்படை விசாரணை பணி என ஒதுக்குகின்றனர். இதனால் காவல் நிலையங்களில் போதிய காவலர்கள் இல்லாமல் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படுகிறது.
மேலும் காவலர்கள் தனிப்படை மற்றும் சட்ட ஒழுங்கு என இரு பணிகளை மேற்கொள்வதால், ஓய்வெடுக்கக்கூட நேரமின்றி மன உளைச்சலில் உள்ளனர். இதனால், காவலர்கள் விசாரணைக்காக வரும் பொதுமக்களைக் கடுமையாகத் தாக்குகின்றனர். இதற்கு உதாரணமாக சாத்தான்குளம் காவல் நிலைய வழக்கு உள்ளது.
மதுரையில் 22 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களும் 16 குற்றப்பிரிவு காவல் நிலையங்களும் உள்ளன. இவற்றில் 1025 காவலர்கள் இருக்க வேண்டும். ஆனால் போதிய காவலர்கள் பணியில் இல்லை. இதுபோல ஒரு காவல் நிலையத்தில் 30 பேர் பணியில் இருந்தால் பாதிக்கும் மேற்பட்டோர் தனிப்படை பணிக்கு அனுப்பப்படுகின்றனர்.