மதுரை சித்திரைத் திருவிழாவின் தொடர்ச்சியாக மதுரை ராமராயர் மண்டகப்படியில் விடிய விடிய நடைபெற்ற கள்ளழகரின் தசாவதார நிகழ்வை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர் மதுரை:உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் சித்திரைத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, கடந்த 5ஆம் தேதி தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளினார். தொடர்ந்து நேற்று (மே 6) வண்டியூர் வைகை ஆற்றில் அமைந்துள்ள தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
இதனையடுத்து நேற்று இரவு ராமராயர் மண்டகப்படிக்கு வந்த கள்ளழகர், அங்கு இரவு 12 மணிக்குத் தொடங்கி விடிய விடிய தசாவதார கோலங்களில் காட்சி அளித்தார். முக்கியமாக முத்தங்கி சேவை, மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம் மற்றும் மோகினி அவதாரம் ஆகிய 7 அவதாரங்களில் தரிசனம் தந்தார்.
பின்னர், மோகினி அவதாரத்திலேயே இன்று (மே 7) மதியம் வரை ராமராயர் மண்டகப்படியிலேயே இருக்கும் கள்ளழகர், பின்னர் ராஜாங்க திருக்கோலம் கொண்டு அனந்தராயர் பல்லக்கில் எழுந்தருளுகிறார். இதனைத் தொடர்ந்து, இன்று இரவு 11 மணிக்கு தல்லாகுளம் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தை வந்தடைவார்.
அங்கு மீண்டும் கள்ளர் திருக்கோலம் ஏற்று, பூப்பல்லக்கில் அதிகாலை 2.30 மணியளவில் மதுரையில் இருந்து விடைபெறுவார். இங்கு இருந்து மீண்டும் பெருமாள் நோக்கி அழகர் பயணம் மேற்கொள்வார். இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க:Madurai Festival Death: மதுரை கள்ளழகர் திருவிழாவில் 5 பேர் உயிரிழப்பு!