தமிழ்நாடு நில அளவு வரைவாளர் கூட்டமைப்பின் தலைவர் முத்துராஜா உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், தமிழ்நாட்டில் 307 வட்ட அலுவலகங்கள் உள்ளன. இதில் லட்சக்கணக்கான பட்டா மாறுதல், நில அளவு பரப்பு மாறுதல், கணினி திருத்தம், உட்பிரிவு பட்டா மாறுதல் போன்ற மனுக்கள் வந்து நிலுவையில் உள்ளன.
இதே கோரிக்கைகளுடன் உள்ள மனுக்கள் நாள்தோறும் வட்ட அலுவலகங்களுக்கு வருகின்றன. தற்போது நில அளவையாளர் பணியிடங்களில், 157 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும். அதே போல 128 நீர் வள ஆதாரப் பகுதிகளில் உள்ள வரைபட உதவியாளர், கள நில அளவை வரை வாளர், நில வருவாய் அளவையாளர், முதுநிலை அளவையாளர் போன்ற பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன.
தற்போது உள்ள குறைந்தளவு நில அளவையாளர்களால், இடங்களை சர்வே நடத்தி உரிய நேரத்தில் பட்டா மாறுதல், நில எடுப்பு மற்றும் நிலம் வழங்குதல் போன்ற பணிகளை முடிக்க முடியாமல், பணிபுரிபவர்களும் பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து உரிய காலிப் பணியிடங்களை நிரப்ப அரசுக்கு உத்தரவிட வேண்டும்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி எம்.எஸ். ரமேஷ், முன் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி இது தொடர்பாக பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலர், நில சீர்திருத்தத்துறை செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் மார்ச் 17 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க:இட ஆக்கிரமிப்பு விவகாரம்: குடிநீர் தொட்டி மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவரால் பரபரப்பு